ttv dhinakaran talk about admk

கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசை வலியுறுத்திதமிழகம் முழுவதும் இன்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அ.ம.மு.க நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, தேனியில் பங்களாமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஓ. பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.

Advertisment

அந்த கூட்டத்தில் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் மடியிலேயேகணம் இல்லாதவர்கள்,நெஞ்சிலே ஈரம் உள்ளவர்கள். ஜெயலலிதாவின் மையப் புள்ளியில் இணைந்திருப்பவர்கள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒன்றிணைந்து விட்டோம். இந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் உண்மையான தொண்டர் படை. ஆனால், அந்தக் கூட்டத்தில் இருப்பவர்கள் எல்லாம் குண்டர் படை. எங்களுக்கு பொழுது போகவில்லை அதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம் என்று ஒருவர் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், அச்சாணிஇல்லாத வண்டி என்று அ.ம.மு.க வை சொல்கிறார். எங்களுக்கு பொழுது போகவில்லை என்றால் வீட்டில் இருப்போம். ஆனால், அவர்களுக்கு பொழுது போகவில்லை என்றால் சந்தில் சிந்து பாடி சிந்துபாத் வேலையை பார்ப்பார்கள்.

Advertisment

அச்சாணியைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களுக்கு அச்சாணிஎன்றால் என்ன என்று தெரியுமா? ஒரு இயக்கத்தின் உண்மையான அச்சாணிஎன்பது விசுவாசமிக்க தொண்டர்கள்தான் என்பது கூட அவர்களுக்குத்தெரியவில்லை. ஏனென்றால் அவர்களுக்கு விசுவாசம் என்றால் என்ன என்று கூட தெரியாது.அவர்கள் துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள். அவர்கள் அச்சாணிமுறிந்து போனவர்கள். டெண்டருக்காக ஒன்று கூடியவர்கள். மடியிலே கணம் உள்ளவர்கள். நானும் ஓ.பி.எஸ்ஸும் இணைந்திருப்பது வெறும் சுயநலத்திற்காக அல்ல என்பதை அவர்களுக்குவருங்காலம் நிரூபிக்கும். ஓ.பி.எஸ் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அதே போல், இத்தனை ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் முதலமைச்சர் பதவியைப் பற்றி சிந்திக்காதவன் நான் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதனால், எங்களுக்கு முதலமைச்சர் பதவி மேல் ஆசை இல்லை.

அ.தி.மு.க. கட்சியையும், துரோகத்தால் வென்றெடுத்த அ.தி.மு.க சின்னத்தையும் இன்றைக்கும் துரோகத்தால் ஒரு சிலர் அபகரித்து வைத்திருக்கிறார்கள். அதை அவர்களிடம் இருந்து மீட்டெடுத்து ஜெயலலிதாவின் தொண்டர்களாகிய உங்கள் கையில் கொடுப்பதற்குத்தான் இன்றைக்கு நாங்கள் இருவரும் ஒன்றிணைந்திருக்கிறோம். அதுதான் எங்களின் ஒரே நோக்கமே தவிர எங்களுக்கு டெண்டர் ஆசையும் இல்லை, ஊழல் செய்வதில் துளியும் நம்பிக்கையும் இல்லை.

நான் 11 வருடம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எப்படி செயல்பட்டேன் என்று மக்களுக்கு தெரியும். அதேபோல், ஓ.பி.எஸ் அமைச்சராக இருந்தபோது எப்படி செயல்பட்டார் என்பதும் உங்களுக்கு தெரியும். அதனால், கொடநாடு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இந்த அரசாங்கம் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இதை விரைவாக செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தக் கண்டனக் கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்று பேசினார்.