தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி சமூக நீதி நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், செப்டம்பர் 17ஆம் தேதியான இன்று பெரியார் 146வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பெரியாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ‘“சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடப்பழக்க வழக்கங்களால் விலங்கிடப்பட்டுக் கிடந்த தமிழக மக்களிடையே விழிப்புணர்வை விதைத்தவர்: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சுய விடுதலை வேட்கையின் மூலம், ஏற்றத் தாழ்வுகளால் உண்டாக்கப்பட்ட அடிமைத் தளைகளை அறுத்தெறிந்தவர்; மக்களைப் பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடத் தூண்டியவர்: சமூகச் சீர்திருத்தவாதி, பகுத்தறிவுப் பகலவன், தென்னகத்தின் சாக்ரட்டீஸ், தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, பெண்கல்வி, பெண்கள் பாதுகாப்பு, சமத்துவம், சம உரிமை, சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக, பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விஜய், அடுத்ததாக தந்தை பெரியாருக்கு வாழ்த்து தெரிவித்தார். இதனால், அவர் எந்த பாதையில் பயணிக்கிறார் என்ற கேள்வி பலரிடமும் இருந்து வந்தது. இதனிடையே, தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரும், பா.ஜ.க மூத்த தலைவருமான தமிழசை செளந்தரராஜன் கூறியதாவது, “நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதை போல் தெரிகிறது. விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். திராவிட சாயலில் வேறொரு கட்சித் தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள பெரியார் திடலுக்குச் சென்று த.வெ.க தலைவர் விஜய், தந்தை பெரியார் நினைவிடத்தில் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். த.வெ.க தலைவர் விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.