தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் மாநில மற்றும் தேசியக் கட்சிகள் தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் ஆகிய பணிகளில் பிஸியாக உள்ளனர்.
இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அ.ம.மு.க.வுடன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி கூட்டணி வைத்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது. இதற்காக இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இது தொடர்பாக அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூட்டணி ஒப்பந்தக் கடித்ததைப் பதிவிட்டுள்ளார். அதில், "06/04/2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி எம்.பி. தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு தமிழகத்தில் வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தமிழக தலைவர் வக்கீல் அஹமது, கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் முகமது ரஹமதுல்லா தாயப் மற்றும் அ.ம.மு.க.வின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் கையெழுத்திட்டுள்ளனர்.
நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எதிர்பார்த்ததை விட அதிக வாக்கு சதவீதங்களைப் பெற்று ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், பா.ஜ.க., ஆகிய கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.