சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் எழிலன், அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. – தே.மு.தி.க. கூட்டணி சார்பில் அ.ம.மு.க.வின் என்.வைத்தியநாதன் ஆகியோர் களத்தில் நிற்கிறார்கள். அமமுக - தேமுதிக கூட்டணியில் தேசிய அளவில் புகழ்பெற்ற முஸ்லீம் தலைவர்களில் ஒருவரான ஓவைசியும், எஸ்.டி.பி.ஐ. கட்சியும் இணைந்துள்ளதால் மேற்கண்ட மூன்று வேட்பாளர்களிடையே தான் போட்டி அதிகரித்துள்ளது.
மூன்று வேட்பாளர்களுமே களத்தில் பம்பரமாக சுழன்று வருகிறார்கள். செயல்வீரர்கள் கூட்டம், பொறுப்பாளர்களுடனான ஆலோசனை, அவர்களுக்கான செயல் திட்டங்கள் வகுப்பது, ஆட்டோ பிரச்சாரம், பைக் பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பை காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்காளர்களை எளிதில் கவர்வதற்கான புதிய வழியை கண்டுபிடித்து அதனை செயல்படுத்துகிறார்கள் பாஜகவினர். அதாவது, தாமரையில் போட்டியிடும் குஷ்புவுக்கு வாக்கு சேகரிக்கும் ஸ்டிக்கர்களை ஒரு லிட்டர், அரை லிட்டர் வாட்டர் பாட்டில்களில் ஒட்டி அதனை வீடுவீடாக கொடுத்து வருகிறார்கள் பாஜகவினர். குஷ்பு குடிநீர் பாட்டில்களை விநியோகிப்பதன் வழியாக, இந்த தொகுதியில் குஷ்புதான் போட்டியிடுகிறார் எனபதை தொகுதிவாசிகளிடம் கொண்டு செல்ல வசதியாக இருக்கிறது என மார்தட்டுகின்றனர் தாமரை கட்சியினர். இது போன்று இன்னும் புதிய புதிய ஐடியாக்கள் ஆயிரம் விளக்கு தொகுதியில் வலம் வரவிருக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர் அக்கட்சியினர்.