Skip to main content

“உழைக்கும் மக்கள் மீது பற்றும் இடதுசாரி அரசியலில் ஈடுபாடும் கொண்டவர்..” - ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு திருமா இரங்கல்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

Thol Thirumavalavan condolence to Ashish Yechury


இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்த அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

 

இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. ஆசிஷ் யெச்சூரியின் மரணத்திற்குப் பிரதமர் மோடி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

 

அந்த அறிக்கையில் அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசியச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மகனும் ஊடகவியலாளருமான ஆசிஷ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

மறைந்த ஆசிஷ், தமது தந்தையைப் போலவே உழைக்கும் மக்கள் மீது பற்றும் இடதுசாரி அரசியலில் ஈடுபாடும் கொண்டவராக விளங்கியவர். எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக வருவார் என்ற நம்பிக்கையை அளித்தவர். அவரது திடீர் மரணம் உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பு ஆகும்.

 

கரோனா  கொடுந்தொற்றின் இரண்டாவது அலை மிக மூர்க்கமாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ மக்களைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இந்தச் சூழலிலும் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டித் தரும் தரகு வேலையிலேயே ஆர்வமாக இருக்கிறது. கரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலை, தனியாருக்கு ஒரு விலை எனத் தடுப்பூசி நிறுவனங்கள் விற்றுக் கொள்ளலாம் என்று மோடி அரசு அனுமதித்துள்ளது. இது மக்கள் மீது ஏவப்பட்டிருக்கிற மிகப்பெரிய வன்முறையே ஆகும். பணம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி, பணம் இல்லாதவர்களுடைய உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்ற மோடி அரசின் அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியதாகும்.

 

கரோனா தடுப்புக்காக மக்களால் பயன்படுத்தப்படும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், பிபிஇ உபகரணங்கள், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தின்மீதும் ஜிஎஸ்டி வரியை விதித்து மக்களை இந்த நேரத்திலும் சுரண்டுகிறது மோடி அரசு.

 

மத்திய அரசு மக்களைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத நிலையில் நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டால்தான் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பொதுமக்களும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளபடி முகக் கவசம் அணிதல், இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றவேண்டும். தேவையில்லாத நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

 

தடுப்பூசி போட்டுக்கொள்வது கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என்பது உலக அளவில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தயங்காமல் யாவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சங்பரிவார்களுக்கு துணை போகிற வகையில் சீமான் பேசுகிறார்” - தொல். திருமாவளவன் எம்.பி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Seeman speaks in a way that supports the Sangparivalavalas Tol Thirumavalavan mp

 

மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், “பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாம் பேசுகிறோம். இதில் நமக்கு ஒரு லாபமும் இல்லை. மணிப்பூரிலிருந்து யாரும் நமக்கு ஓட்டு போடப் போவதில்லை. இங்கே இருக்கிற கிறிஸ்தவர்களும் ஓட்டு போடப் போவதில்லை. நாம் நினைச்சுக்கிட்டு இருக்கோம், கிறிஸ்துவத்தையும், இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று, அது சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த நாட்டில் நடந்த அநீதி அக்கிரமத்துக்கு பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமிய கிறித்துவ மக்கள் தான்" என்று கூறியிருந்தார். இது விவாதப் பொருளாக மாற நடிகர் ராஜ்கிரண் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

 

நடிகர் ராஜ்கிரண் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “சிஐஏ போராட்டத்துக்கு என்னுடன் உடன் வந்தாரா. முத்தலாக் தடை சட்டத்திற்கு வீதியில் நின்றாரா. அவர் வயதில் பெரியவர், நான் மதத்தைப் பற்றி பேசிவிட்டதாக நினைக்கிறார்” என்று கூறினார். அதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “மதத்தின் அடிப்படையில் மனிதனுடைய எண்ணிக்கையை கணக்கிடுவதே தவறு. மதம் மாற்றிக்கொள்ள கூடியது. ஆனால் மொழி மற்றும் இனம் மாற்றிக் கொள்ள முடியாது. இளையராஜா பெரும்பான்மை. யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை. இது மாதிரி உலக பைத்தியக்காரத்தனம் எங்கயாவது இருக்கா. என் கட்சியில் சிறுபான்மை பிரிவு என்பது கிடையாது. இனிமேல் சிறுபான்மை என்று யாராவது கூறினால் செருப்பால் அடிப்பேன்” என்று ஆவேசமாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.

 

இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தைத் திறந்து வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மொழி உணர்வு, இன உணர்வு வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இந்தியா முழுவதும் இஸ்லாமியர்கள் என்ற உணர்வும், கிறிஸ்தவர்கள் என்ற உணர்வும் மட்டுமே அவர்களுக்கு பாதுகாப்பைத் தரக்கூடியது. அந்த உணர்வை சிதைக்க வேண்டும் என்பது தான் சங்பரிவார்களின் நோக்கம். அதே கருத்தை சீமான் போன்றவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் சங்பரிவார்களுக்குத் துணை போகிற வகையில் பேசி வருவது அதிர்ச்சியளிக்கிறது. சங்பரிவார்கள் என்ன வெறுப்பு பிரச்சாரத்தை பரப்புகிறார்களோ அதே வெறுப்பு பிரச்சாரத்தை இவர்கள் முன்மொழிகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அவர் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று கூறினார்.

 

 

Next Story

உயர்நீதிமன்ற சுற்றறிக்கை விவகாரம்; விசிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு 

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

 

High Court Circular Matter vck issue

தமிழ்நாட்டின் நீதிமன்றங்களில் மாகத்மா காந்தி, திருவள்ளுவரைத் தவிர வேறு எந்தத் தலைவரின் சிலைகளும், உருவப் படங்களும் வைக்கக் கூடாது என்று அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். இந்தச் சுற்றிக்கைக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக அமைப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற வாயில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதே போன்று கல்லூரி மாணவர்களும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் எம்.பி. தனது ட்விட்டர் பதிவில், “புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவப் படம் அல்லது திருவுருவச்சிலை போன்றவற்றை நீதிமன்ற வளாகங்களில் நிறுவிடக்கூடாதெனவும் ஏற்கனவே அவ்வாறு வைக்கப்பட்டிருந்தால் அப்புறப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் மாவட்டங்கள் தோறும் நடைபெறும். தோழமைக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.