சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரை அடுத்துள்ளது தொழுதூர். இந்த ஊரைச் சேர்ந்த சின்னபிள்ளை, வெள்ளையன் தம்பதிகளின் மூத்த மகன் கணேசன். தங்கள் உழைப்பால் தங்கள் மகன் கணேசனை எம்.ஏ, பிஎட். எம்.ஃபில் வரை படிக்க வைத்தனர் சின்னபிள்ளையும் வெள்ளையனும். கணேசனுக்கு அரசுப் பணியைவிட அரசியல் பணியில் ஆர்வம் ஏற்பட்டது.
1989 - 1991 காலகட்டத்திலேயே மங்களுர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனவர் (இரண்டு ஆண்டுகளில் திமுக ஆட்சி அப்போது கலைக்கப்பட்டது) அடுத்து 1996-ல் (ஒரு ஆண்டு வரை) சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. பதவியில் இருந்தார். 2001 - 2006 சட்டமன்றத் தேர்தலில் மங்களூர் தொகுதியில் திமுக கூட்டணியில் திருமாவளவன் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, பின்னர் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அப்போது நடந்த இடைத்தேர்தலில் கணேசன் நின்று எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். அடுத்து 2016ல் தொகுதி மறுசீரமைப்பில் திட்டக்குடி தொகுதியாக மாறியபிறகு, அங்கு போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். தற்போது நடந்து முடிந்த 2021 தேர்தலில் மீண்டும் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார் கணேசன். அவருக்கு தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை ஒதுக்கியுள்ளது திமுக தலைமை.
கணேசன், பல தேர்தல்களில் வெற்றியையும் தோல்வியையும் மாறி மாறி சந்தித்தவர். எந்த நிலையிலும் மனம் தளராமல், சலிப்பில்லாமல் கட்சியினரோடும் தொகுதி மக்களோடும் வலம் வருபவர். கடந்த ஆண்டு கரோனா காலத்தில் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தொகுதி முழுவதும் மக்களுக்கு அரிசி, காய்கறி, பணம் என்று தன்னால் முடிந்ததைச் சளைக்காமல் ஊர் ஊராகச் சென்று வழங்கியவர்களில் இவரும் ஒருவர். அதனால் இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் திரும்பினார்.
எப்போதும் தொகுதியில் உள்ள மக்களின் கண்களில் தெரிந்து கொண்டே இருப்பார். காரில் போகும்போது அரசியல் விஐபிக்கள் பலர் கார் கண்ணாடியை ஏற்றிக்கொண்டு செல்வதுண்டு. ஆனால் இவர் காரில் போகும்போது கட்சிப் பிரமுகர்கள், கட்சி கடந்து அறிமுகமானவர்கள் என யாராவது நடந்து சென்றால் கூட காரை நிறுத்தி விசாரித்து விட்டுச் செல்லும் பழக்கமுடையவர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எந்தக் கட்சியாக இருந்தாலும் கட்சி விரோத மனப்பான்மை இல்லாமல் பழகக்கூடியவர்.
கட்சியினர் குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாமல் பங்கு கொள்பவர். இவர் கடும் உழைப்பாளி என்றும் அத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இவருக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளது தொகுதி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் அமைச்சரானதற்கு அத்தொகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துவருகின்றனர். மேலும் மிகவும் பின்தங்கிய திட்டக்குடி தொகுதியில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் எனவும், வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் எனவும் தொகுதி மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.