திருவள்ளூர் அருகே அரசு கல்லூரி புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு அழைக்கப்படாததால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தனது ஆதரவாளர்களுடன் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாதன் நாராயணசாமி அரசினர் கலை கல்லூரியில் வளாகத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுக நிர்வாகத்தின் சமூக வளர்ச்சி பொது நிதியிலிருந்து ரூபாய் 5 கோடியே 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் காமராஜர் துறைமுக மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா தலைமையிலும், தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்க இயக்குநர் கார்மேகம் முன்னிலையிலும் நடைபெறுவதாக இருந்தது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் சுனீல் பாலீ வால் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதாக இருந்தது.
இதற்கான அழைப்பிதழில் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், அக்கட்சியின் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் பெயர்கள் இடம்பெறாததாலும், இருவருக்கும் விழாவில் கலந்து கொள்வதற்கான நேரடி அழைப்பு இல்லாததாலும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் விழா நடைபெறும் அரசு கல்லூரி வளாகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் நேரடியாக சென்று இது குறித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த காமராஜர் துறைமுக தலைவர் சுனீல் பாலீ வால் மற்றும் அதன் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியாவை முற்றுகையிட்டு இதுகுறித்து கேள்வி எழுப்பினார்.
இதனை பொறுப்பேடுத்தாமல் இருவரும் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து அதனுள் குத்துவிளக்கையும் ஏற்றி வைத்து, பின்னர் கல்லூரி முதல்வரின் அறைக்கு சென்று விட்டனர். இதனால் கொதிப்படைந்த சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், கல்லூரி முதல்வரின் அலுவலக நுழைவு வாயில் முன்பாக கையில் கருப்பு கொடி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காமராஜர் துறைமுக நிர்வாகம், நடுவன் அரசு ஆகியவற்றுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு காமராஜர் துறைமுக தலைவர் சுனீல் பாலீ வால், அதன் மேலாண்மை இயக்குநர் ஐரீன் சிந்தியா ஆகியோர் அங்கிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றனர். அப்போதும் சட்டமன்ற உறுப்பினரும் அவரது ஆதரவாளர்களும் இருவருக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.