“கால்நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்க தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது” என தனது சகோதரி பானுமதி அம்மையார் குறித்து உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எனது உடன்பிறந்த தமக்கை கு.பானுமதி என்கிற வான்மதி எனக்கு 'அக்கா என்னும் அம்மா ' ! அவர் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தனக்காக வாழாமல் எனக்காக வாழ்ந்தவர்.
கடந்த 10.07.2020 அன்று அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் 17-07-2020 அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இன்று(05-08-2020) காலை10.25 மணியளவில் காலமாகிவிட்டார்.
மீண்டு வந்துவிடுவார் என்று வலுவான நம்பிக்கையுடன் இருந்தேன். கடந்த ஜூலை 22ஆம் நாள் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் அறைக்குள் நேரில் சென்று பார்த்தேன். என்னைக் கண்டதும் அவர் பற்றி துடித்தார்.
"நீ ஏன் இங்க வந்த, நீ பத்திரமாயிரு சாமி" என்று கையெடுத்து கும்பிட்டு "வெளியே போ வெளியே போ" என கதறினார். "எனக்கு சாவறத பத்தி பயமில்ல; ஒன்ன அம்போனு விட்டுட்டுப் போறேன; உன்னை யார் சாமி பாத்துக்குவாங்க, அதான் எனக்கு பெரிய கவலயா இருக்கு; ஒன்ன நம்பி சனங்க இருக்காங்க;
நீ பத்திரமா இரு; ரூம விட்டு ஒடனே வெளிய போ " என்று அக்கா அலறி துடித்தார். அதனால், அவருக்கு இருமல் கடுமையாகி, மூச்சுத்திணறல் ஏற்பட, நான் பதறிப்போய் அவரை அமைதிப்படுத்த முயன்றேன்.
நான் உடனிருக்கிறேன் என்பதை அறிந்தால் அவருக்கு தெம்பாக இருக்குமென்று நம்பிதான் உள்ளே சென்றேன். ஆனால்,அவர் என்னைக் கண்டதும் எனக்கு ஏதும் ஆகிவிடக்கூடாதே என பதைபதைத்துப் போனார். இரண்டே நிமிடங்களில் நான் வெளியேறிவிட்டேன். பின்னர் அவர் ஆக்சிஜன் கருவி உதவியுடன் அமைதியான சுவாசத்துக்குத் திரும்பினார். தொடர்ந்து ஆக்சிஜன் பெற்றவாறே சிகிச்சையிலிருந்தார். மருத்துவர்களும் நம்பிக்கையளித்தனர், மீண்டு வந்துவிடுவார் என்று நம்பியிருந்தேன்.
உள்ளூர அக்காவைப் பற்றிய கவலை என்னை அரித்துக்கொண்டே இருந்தது. அக்காவோடு உடனிருக்க இயலவில்லையே என்கிற குற்ற உணர்வு என்னை வதைத்தது. அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இயக்கப்பணிகளில் இணையவழி நிகழ்வுகளில் பங்கேற்று வந்தேன்.
இன்று காலையில் இந்த பேரிடி என்னைத் தாக்கியது, மூளைச் சிதறியது போன்ற அதிர்ச்சி. மீளவியலாத துக்கத்தின் தாக்குதல். அக்காவை இழந்துவிட்டேன் என்பதை இன்னும் மனம் ஏற்கவில்லை.
அக்கா இளம் வயதிலேயே கணவரை இழந்தவர். சின்னஞ்சிறு வயதில் மூன்று பிள்ளைகள். இல்லற வாழ்வில் அவர்கண்ட துன்பங்கள் விவரிக்க இயலாதவை. நான் என்னை பொதுவாழ்வில் ஒப்படைத்துக்கொண்டு நாடு முழுவதும் சுற்றி அலைந்ததையும் ஓட்டல்களிலேயே தொடர்ந்து சாப்பிடுவதையும் எண்ணி வருந்தி, எனக்கு துணையாயிருக்க வேண்டுமென 90-களின் தொடக்கத்தில் சென்னைக்கு வந்து தங்கினார். எனது உடைகளைத் துவைப்பதும் நான் சென்னையில் தங்கும் நாட்களில் எனக்கு உணவு சமைப்பதும்தான் அக்காவுக்கு ஒரே வேலை. ஒருநாளும் எதற்காகவும் அவர் முகம் சுளித்ததில்லை; எவரையும் கடிந்து கொண்டதில்லை. எதுவும் வேண்டுமென எந்நிலையிலும் கேட்டதில்லை.
“தயவுசெய்து கல்யாணம் பண்ணிக்கோ தம்பி; அம்மா சதா உன்னை நினைத்து அழுது கொண்டே இருக்காங்க " என்பது மட்டுமே அவரது வழக்கமான ஒரே கோரிக்கை.
கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு நான் வரும்போது தகவலறிந்து, அங்கே வந்து கும்பல்சூழ பரபரப்பாயிருக்கும் என்னைத் தூரமாய் நின்று பார்த்துவிட்டுப் போய்விடுவார். கால்நூற்றாண்டாய் எனக்காக வாழ்ந்த அக்காவை பாதுகாக்க தவறிவிட்டேனே என்கிற குற்ற உணர்வு நெஞ்சை நெருப்பாய் சுடுகிறது.
"இத்தனை ஆண்டுகளில் ஒருநாள் கூட என்னோடு இந்த வீட்டில் நீ தங்கியதில்லை. கரோனா நெருக்கடியில் எங்கேயும் வெளியே போகாதே; இப்போதாவது என்னோடு இரு சாமி" என்று என்னிடத்தில் மார்ச்25 அன்று கெஞ்சிக் கேட்டார்.
"இங்கே இருந்தால் என்னைப் பார்க்க தினம் கூட்டம் வரும்; நான் வெளியில் தங்கி கொள்கிறேன்" என்று அவர் பேச்சைமீறிவிட்டு புதுவை பகுதிக்கு வந்து விட்டேன். அக்காவின் அந்த ஆசையைக்கூட நிறைவேற்ற இயலாதவனாகிவிட்டேனே என்று குமைகிறது நெஞ்சம்.
இப்போது அம்மாவை எப்படி தேற்றுவேன்?- என்கிற பெருங்கவலையோடு அக்காவின் திருவுடலுடன் அங்கனூர் போய்க் கொண்டிருக்கிறேன். அக்கா இறந்ததை இன்னும் அம்மாவிடம் சொல்லவில்லை. "சீரியஸா இருக்கு" என்று சொன்னதற்கே அவர் பதறி துடித்திருக்கிறார்; மயக்கமடைந்துவிட்டார். அம்மாவை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அக்காவின் விருப்பப்படி அப்பா அடக்கம் செய்யப்பட்ட இடத்தருகே அங்கனூரில் அடக்கம் செய்யப் போய்க் கொண்டிருக்கிறோம். இந்த அதிர்ச்சியிலுருந்து மீண்டெழுவேனா தெரியவில்லை.
"எல்லோரும் கவனமாயிருங்கள்; கரோனா கொடியது" என்று ஒவ்வொரு நாளும் முகநூல் நேரலையில் கெஞ்சுவேன். ஆனால், அக்காவைப் பற்றி கவனமில்லாமல் இருந்துவிட்டேனே. என்னை என்னால் ஆற்றுப்படுத்த இயலவில்லை. மீண்டும் வேண்டுகிறேன், எச்சரிக்கையாய் இருங்கள் 'கரோனா கொடியது' !
ஆற்றாமையும் வெறுமையும் என்னை ஆக்கிரமித்துக்கொண்டு ஆட்டிவைக்கிறது. அக்கா கவலைபட்டது போல இப்போது நான் தனித்துவிடப்பட்ட உணர்வுக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.
இந்த பெருந்துயரில் நான் வீழ்ந்துழலும் நிலையிலும், அக்காவைக் காப்பாற்றுவதற்காக உயிரைப் பணயம் வைத்துப் பெற்றப் பிள்ளையைப்போல உடனிருந்து கவனித்துக்கொண்ட குடும்ப மருத்துவர் அனுரத்னா அவர்கள் உள்ளிட்ட, அம்மருத்துவமனையைச் சார்ந்த இதர மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
எனது தமக்கையாக மட்டுமின்றி விடுதலை சிறுத்தையாகவும் வாழ்ந்த அவர், தென்சென்னை மாவட்ட மகளிரணியில் சிலகாலம் மாவட்ட துணை செயலாளராக பொறுப்பேற்று பணியாற்றியவர். கட்சியின் மாநாடுகள், பேரணிகள், இயக்கத் தோழர்களின் இல்ல நிகழ்ச்சிகள் போன்றவற்றில் தொடர்ந்து தவறாமல் பங்கேற்றவர்.
எனக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அக்கா என்னும் அம்மாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைக் காணிக்கையாக்குகிறேன்.
இயன்றவகையில் மக்கள் பணியிலும் பங்கேற்ற வான்மதி என்னும் விடுதலை சிறுத்தைக்கு கட்சியின் சார்பில் எனது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.