Skip to main content

குடிதண்ணீரில் இந்தி; திருமாவளவன் எம்.பி. ஆவேசம்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

thirumavalavan condemns Hindi imposition water bottle

 

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழகத்தில் மட்டும்தான்  இந்தி மொழி என்றாலே தீப்பொறி பறக்கிறது. என்ன காரணம் என்றால் இதற்கு ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலம் இருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்கள் நடந்திருக்கின்றன. குறிப்பாகக் கடந்த 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு ராஜாஜி முதலமைச்சராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒரு சில நாட்களில் 6, 7, 8 ஆம் வகுப்புகளில் இந்தி மொழி கட்டாயமாகக் கற்பிக்கப்படும் என அறிவித்தார்.

 

அதற்குத் தமிழர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தது. ஆனால், அதைப் பொருட்படுத்தாத ராஜாஜி அரசு 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தி மொழியைக் கட்டாயமாக்கும் உத்தரவை வெளியிட்டது. இதனால் வெகுண்டெழுந்த தனித் தமிழ் இயக்கங்களும், மாணவர்களும், தமிழறிஞர்களும் வீதிக்கு வீதி போராட்டத்தில்  குதித்தனர். இந்தப் போராட்டத்தின் போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை சமாளிக்க முடியாமல் அன்றைய ராஜாஜி அரசு திணறிப் போனது. ஒரு கட்டத்தில், 1940 ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக ராஜாஜி அரசு அறிவித்தது. 

 

தொடர்ந்து 1965 இல் நடந்த இந்தி திணிப்பின் போதும் மக்களும் மாணவர்களும் வீதியில் இறங்கி போராடினார்கள். அதன்பிறகு 1968 இல் முன்னாள் முதல்வர் அண்ணா இருமொழி கொள்கை குறித்து தீர்மானம் நிறைவேற்றினர். 1986 இல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் இந்தி மொழிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். இப்படி தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயலலிதா மற்றும் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் என அனைவரும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்திருக்கின்றனர். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள ஏனைய மாநிலக் காட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தி திணிப்புக்கு எதிராக தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், தொடர்ந்து மத்திய அரசு இந்தி திணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

 

இந்நிலையில்தான் நேற்று சமூக வலைத்தளங்களில் தண்ணீர் பாட்டில் ஒன்று வைரலானது. அதில் தமிழில் 'பாணி' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  இந்தியில் 'பாணி' என்றால் தண்ணீர் என்று பொருள். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இந்த தண்ணீர் பாட்டில் புகைப்படத்தை பகிர்ந்து, "சனாதன சங்கிகளின் சதியைப் புரிந்துகொள்ள இது ஒரு சான்று. குடிநீரை 'பாணி' என்று தமிழில் தான் எழுதுகிறார்களாம் ? இது வெறும் மொழி அரசியல் அல்ல; ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே கலாச்சாரம் என்கிற பன்மைத்துவத்துக்கு எதிரான சங்பரிவார்களின் சூதுநிறை அரசியலே ஆகும்" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் ஆணையத்தில் குளறுபடி'- சந்தேகம் எழுப்பிய திருமாவளவன்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Confusion in the Election Commission'- Thirumavalavan's suspicions

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று பிற்பகல் நாட்டின் 18 வது நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என தீவிரம் காட்டி வரும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 'தேர்தல் வாக்குப்பதிவு தேதிக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்கவிருக்கும் தேதிக்கும் 45 நாட்கள் இடைவெளி இருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தமுறை தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்தல் ஆணையர் பதவிவிலகி அதற்கான இடங்கள் காலியாக இருந்ததன் காரணமாக ஒரு வாரம் கால தாமதமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவுகளோடு ஒப்புக்கு சீட்டுகளையும் 100% இணைத்து ஒப்பீடு செய்து முடிவு வெளியிட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“மத்திய அரசு சி.ஏ.ஏ சட்டத்தை அமல்படுத்தியதன் நோக்கம் இதுதான்” - திருமாவளவன்

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Thirumavalavan announced the protest for CAA Act

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று முன்தினம் முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், சி.ஏ.ஏ சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதனையொட்டி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திருமாவளவன், “இந்த சட்டத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். அந்த எதிர்ப்பை எதிர்கொள்ள இயலாத காரணத்தில் கடந்த 3 ஆண்டுகளாக் அச்சட்டத்தை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போது அதை அமல்படுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பெரும்பான்மைவாத அரசியலை முன்னெடுக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், வரும் மார்ச் 15ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம். பா.ஜ.க.வினர் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் சென்றதேயில்லை. மணிப்பூரில் நாள்தோறும் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அங்கு சென்று பார்க்கவேயில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் ஒரே மாநிலத்தில் திரும்ப திரும்ப வருகிற நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் எவ்வளவு சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் என்பதை நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் நலனை விட தங்கள் அரசியல் ஆதாயம் தான் முக்கியம் என்று கருதக்கூடியவர்கள். அதனால், இந்தியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிப்பது அவசியம். சனாதன சக்திக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று கூறினார்.