Skip to main content

“எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள்..” - முன்னாள் அமைச்சர் வீரமணி  

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

"They have gone back with disappointment without getting any evidence." - Former Minister Veeramani

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள், உறவினர்கள் வீடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

 

18 மணி நேரச் சோதனைக்குப் பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலிருந்து மொத்தம் ரூ.34 லட்சம் ரொக்கம், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான டாலர், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள், 5 கம்ப்யூட்டர் ஹாட்டிஸ்க், வங்கிக் கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணலும் கணக்கில் வரவழைக்கப்பட்டுள்ளது.

 

சோதனை முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியது, “அரசியல் விளம்பரம் தேடச் செய்யப்பட்டது இந்த சோதனை. வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக 5 ஒன்றிய கழகச் செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவது, அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகவே ஆளும் கட்சியினர் ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதையும் நீதி மன்றத்தின் வாயிலாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம்.

 

இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். நீதிமன்ற வாயிலாக எந்த வழக்குத் தொடுத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ அதற்குத் தயாராகவே இருக்கிறோம். 50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக. எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கும் இயக்கம் வளர்வதற்கும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்