நான் சொன்னாலும் கேட்கக்கூடிய மனநிலையில் அதிமுகவினர் இல்லை என ஈவிகேஎஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 66 ஆயிரத்து 675 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றியை இமாலய வெற்றியாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ். இளங்கோவன், “இடைத்தேர்தலில் வெற்றி என்பது எதிர்பார்த்தது தான். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. அதேபோல் ராகுல் காந்திக்கும் அங்கீகாரம் தரும் வகையில் இந்த வெற்றி அமைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெல்லும். அதிமுகவிற்கு நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. நான் சொன்னாலும் கேட்கக்கூடிய மனநிலையில் அவர்கள் இல்லை.” எனக் கூறினார்.