
நேற்று (14-02-2021) மாலை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் – கீழையூர் ஒன்றியம், வேளாங்கண்ணி – வேதாரண்யம் சாலை, பிரதாபராமபுரம் ஊராட்சியில் நடைபெற்ற, திருவாரூர் – நாகை தெற்கு மாவட்டங்களுக்கான ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று, அப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார். அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். பொதுமக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்து மு.க. ஸ்டாலின் பேசியபோது, மேரி என்பவரது கோரிக்கைக்குப் பதிலளித்து ஸ்டாலின் கூறியதாவது: “மேரி அவர்கள் இங்கு எவ்வாறு பேசினார்கள் என்று தெரியும். இங்கே மனுவில் கூட அதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதைப் படிக்கும்போது என்னுடைய கண்கள் கலங்குகிறது. கணவனை இழந்து, கையில் குழந்தையோடு வாழ வழியில்லாமல் சகோதரி மேரி அவர்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் சென்று பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லாமல், தீக்குளிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று உறுதியளித்த அ.தி.மு.க.வினர் இவரிடமும் மோசமான முறையில் நடந்திருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். பணிவோடு, உரிமையோடு கேட்டுக்கொள்கிறோம். கீழ்வேளூர் தொகுதியில்தான் தலைவர் பிறந்த திருக்குவளை உள்ளது. அந்த உணர்வோடு கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். மன உறுதியோடு இருங்கள். நாங்கள் இருக்கிறோம். இந்த 3 மாதங்கள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறதோ அதை எல்லாம் நிச்சயமாக தீர்த்துவிடலாம். ஆனால் அதே நேரத்தில் மனசாட்சியற்ற மிருகங்களுக்கு நிச்சயமாக உரிய தண்டனையை வழங்குவோம் என்பதை நான் சொல்கிறேன். அதுமட்டுமில்லாமல் சட்டமன்ற உறுப்பினர் - முன்னாள் அமைச்சர் மதிவாணன் ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். கவலைப்படாதீர்கள். இன்றோ நாளையோ அவர் உங்களை வந்து சந்திப்பார். சந்தித்து நிச்சயமாக என்ன உதவி செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார். கவலைப்படாதீர்கள்” எனக் கூறினார்.

மேலும், “இன்னும் சொன்னால், 1100 எண்ணுக்கு ஃபோன் செய்வது என்ற திட்டம் ஏற்கனவே ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டம்தான். 'மக்களின் குறைகளை உடனுக்குடன் களைய 1100 என்ற எண்ணுக்கு அழையுங்கள்' என்று சொல்லி ‘அம்மா அழைப்பு மையம்’ என்ற திட்டத்தை 19.01.2016 அன்று முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். 1100 என்ற திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தி இருந்தாலே இன்றைக்கு இந்த அளவுக்கு மனுக்கள், புகார்கள், கோரிக்கைகள் வந்திருக்காதே. இந்த அரசாங்கம் செயல்படவில்லை என்பதால்தானே இத்தனை ஆயிரம் மக்கள் வந்து மனுக்கள் கொடுக்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே ஊழல் கட்சி - ஊழல் ஆட்சி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சிதான். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தலைமையிலான அ.தி.மு.க.தான்.
இவர்களிடம் உள்ள பணத்தை வைத்து தமிழ்நாட்டுக்குப் பட்ஜெட்டே போடலாம். சுயநலத்துக்கான ஆட்சி இது. தங்களது குடும்பத்துக்காக, உறவினர்களுக்காக, பினாமிகளுக்காக அவர்கள் ஆட்சி நடத்துகிறார்களே தவிர, மக்களுக்காக நடத்தவில்லை. நமது ஆட்சி அமைந்ததும், அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் குறித்து விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று நான் அறிவித்துள்ளேன். ஊழல் செய்து, ஊழல் செய்து அவர்களது தோல் தடித்துவிட்டது. கலெக்சன் வாங்கி வாங்கி அவர்களது கை கறை படிந்துவிட்டது. இந்தக் கறைபடிந்த கரங்களைத் தண்டிக்கும் தேர்தல்தான் இந்தத் தேர்தல். இத்தகைய ஊழல்வாதிகளுக்குப் பாடம் புகட்டுங்கள். திமுக ஆட்சி மலரும், உங்கள் கவலைகள் யாவும் தீரும். நன்றி வணக்கம்.” இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.