Skip to main content

நிலத்தடியில் துயில் கொள்ளும் சூரியன்... கலைஞருக்காக மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எழுதிய இரங்கல் கவிதை 

Published on 10/08/2018 | Edited on 10/08/2018
thamimun ansari


முத்தமிழ் கலைஞரே...
தமிழ் முத்தமிட்ட அறிஞரே...
 

நீங்கள் 
பெரியார் 
விட்டுச்சென்ற 
போர் முரசு!
அண்ணா 
அடையாளம் 
காட்டிச் சென்ற 
தமிழ் பேரரசு!
எம்ஜிஆர் 
ரசித்த 
கலையரசு!
 

நீங்கள் 
விளிம்புநிலை மக்களின் உரமாகவும்,
விடுதலைக்கு ஏங்கிய மக்களின் 
நிறமாகவும் இருந்தீர்கள்.
 

நீங்கள் 
எண்பது ஆண்டுகளை கடந்தது பொது வாழ்வில் அல்ல 
போர் வாழ்வில்..!



சமூக நீதியில் 
நீங்கள் காட்டிய 
வீரமும்,
பின்தங்கிய மக்களிடம் காட்டிய ஈரமும் 
அரசியலில் ஒரு வரமாகும்!
 

நீங்கள் 
இலக்கியம் பேசினால் 
அது தமிழருவி!
அரசியல் பேசினால் 
அது போர்க்கருவி!
 

நீங்கள் 
தந்த பராசக்தி
சமூகத்தை புரட்டிப் போட்ட கடப்பாரை!
ஏனெனில் 
நீங்கள் படித்தது 
தந்தை பெரியாரை!



உங்கள் உதட்டு சுழிப்பில் தமிழர்களை கொள்ளை கொண்டீர்கள்.
பரிவான பார்வையில் குடிசை மாற்று வாரியம் கண்டீர்கள்.
 

சமத்துவபுரம்,
வள்ளுவர் கோட்டம்,
பூம்புகார் கலைக்கூடம்,
அண்ணா மேம்பாலம்,
இவையெல்லாம் 
நீங்கள் நாட்டுக்கு தந்த தாம்பூலம்.
 

தமிழர்களுக்கு ஒரு இழுக்கு  என்றால் சவுக்கை தூக்குனீர்கள்.
தமிழுக்கு ஒரு அழுக்கு என்றால் எழுதுகோலை ஏந்துனீர்கள்.
 

நீங்கள் ஒரு வெப்பச்சூரியன்.
உங்கள் 
கதிர்வீச்சில் ஆதிக்க பூச்சிகள் நடுங்கின!
விஷப்பூச்சிகள் ஒடுங்கின!

உங்கள் மரபணுக்கள் மருத்துவமனையில் போராடியது. தோற்றது!
உங்கள் புகழுடல் மெரினாவுக்காக வாதாடியது!
இறுதியில் வென்றது!
 

நீங்கள் மறைந்துவிட்டீர்கள்.
தமிழர் தோட்டங்களில் பூக்கள் வாடுகின்றன.


உங்கள் அரசியல் எதிராளிகளும் வருந்துகிறார்கள்!


சூடான அரசியலையும்,
சுவையான விவாதங்களையும் இனி எப்போது காண்போம் என்று!
 


 

 

 

 

சார்ந்த செய்திகள்