எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை பேசும் போது, "தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் உள்ள 12 ஆம் வகுப்பு பொதுத்தமிழ் பாடப்புத்தகத்தில் 1915 ஆம் ஆண்டு பாரதியார் எழுதிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. அதில் தமிழ்நாடு எனக் குறிப்பிடுங்கள் என அப்போதே பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டின் பெயரை நாடாளுமன்றமும் சட்டமன்றமும் ஏற்றுக்கொண்டு சட்டப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்காகத்தான் ஒவ்வொரு தமிழரும் பாடுபட்டனர். பாரதியாரால் போற்றப்பட்ட; அண்ணாவால் சூட்டப்பட்ட பெயரை சொன்னால்; அண்ணா, பெரியார் பெயரை சொன்னால் பிரிவினைவாதிகள் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. திராவிட இயக்கத்தை பார்த்து குறை சொன்னால் மனம் வேதனை அடைகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்கள் மொழியுணர்வும் கலாச்சாரப் பண்பாட்டு உணர்வும் மிக்கவர்கள். அதற்காகத்தான் திராவிட இயக்கம் உருவாகியது. இதையெல்லாம் குறிப்பிட்டுப் பேசினால் பாஜகவினர் நம்மைப் பிரிவினைவாதிகள் என்று சொல்கின்றனர். இப்படிப்பட்ட கருத்துக்களை பாஜகவினர் பரப்பலாமா? பாஜகவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்" என்று பேசினார்.