கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கான டெண்டர் கோரப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.
மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஏற்கனவே டெண்டர் முறைகேடு வழக்கில் முகாந்திரம் இல்லை என்று சொல்லப்பட்ட நிலையில் ஆட்சி மாற்றத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ராமன் அமர்வு விசாரித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன் மீதான மாநகராட்சி டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எஸ்.பி.வேலுமணி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது எனக் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக எஸ்.பி.வேலுமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை மட்டும் ரத்து செய்து உத்தரவிட்டது.