தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முதல்வரின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சவால் ஒன்றை விடுத்துள்ள சம்பவம் தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒய்.எஸ்.ஷர்மிளா செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், "மாநிலத்தில் உள்ள மக்கள் வறுமையில் உள்ளனர். விவசாயிகள் கடன் சுமையால் அவதிப்படுகின்றனர். ஆனால் முதல்வர் இதனை எல்லாம் மறந்துவிட்டு 'மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார். நான் அவருக்கு ஷூ ஒன்றை பரிசாக அளிக்கிறேன். அவர் அந்த ஷுவை அணிந்துகொண்டு என்னுடன் நடைப்பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும். அப்போது அவர் சொல்வது போன்று மக்கள் வறுமையில் வாடாமல் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்றால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன்.
அதே சமயம் நான் சொல்வதைப் போன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்தும், பெண்கள் வறுமையில்தான் வாடுகின்றனர் என்றால் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவர் ஏற்கனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி பட்டியலினத்தவர் ஒருவரை முதலமைச்சராக்க தயாரா?" என்று சவால் விடுத்துள்ளார்.