தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் காணொளி முலம் பொதுச் செயலாளர் பாலாறு வெங்கடேசன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் ஒருங்கிணைத்து நடத்தினார். கூட்டத்தில் நிர்வாகிகள் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்ததாவது. இந்தியா முழுவதும் கரோனா தாக்குதலுக்கான ஊரடங்கை மத்திய அரசு அமல்படுத்தி நடத்தி வருகிறது. அவ்வப்போது தளர்வுகளக்கான அறிவிப்புகளையும் மத்திய அரசே கொள்கை முடிவெடுத்து செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் கரோனா சமூக தொற்று தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களைப் பின்பற்றி நிதிச்சுமையைக் காரணம் காட்டி மதுக்கடைகளைத் தமிழகத்தில் திறந்து சமூக இடைவெளி உள்ளிட்ட நடைமுறைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்று தீவிரமடைந்து தமிழகம் பேரழிவைச் சந்திக்கும் பேராபத்து ஏற்ப்பட்டுள்ளது.
உடனடியாக ஊரடங்கு தொடரும் வரை மதுக்கடைகளை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். மாநில அரசுகளுக்குத் தேவையான நிதி உதவிகளை வழங்கிட வேண்டும். மறுத்தால் மதுக்கடைகள் திறப்பால் தென்னிந்தியா முழுவதும் ஏற்படும் பேரழிவுக்கு மத்திய, அரசே பொறுப்பேற்க வேண்டும் என எச்சரிக்கிறேன்.
விவசாயிகள் உற்ப்பத்தி செய்த பொருட்கள் ஊரடங்கால் விற்பனை செய்ய முடியாமல் காய்கறி, பழ வகைகள் அழிந்து வருவது வேதனையளிக்கிறது. அழிவுக்கேற்ப கர்நாடகா, புதுச்சேரி மாநில அரசுகள் இழப்பீடு வழங்கியதைப் பின்பற்றி தமிழக அரசும் வழங்கிட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உற்ப்பத்தி பொருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திட வேண்டும்.
மந்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் திரும்ப செலுத்துவதற்க்கான கால அவகாசம் வழங்கி உள்ளது. ஆனால் விவசாயிகளுக்கான கடன் சலுகைக்கான கால நீட்டிப்பு வழங்காததால் 9% முதல் 13% ம் வரை வட்டி அபராத வட்டி சேர்த்து கெடுபிடி வசூல் நடவடிக்கைகளில் வங்கிகள் ஈடுபடுவது கண்டனத்திற்குறியது. மத்திய அரசு அறிவித்தப்படி உடன் கடன் தவணை நீட்டிப்புக் காலத்திற்கு உரிய வட்டி சலுகைக்கான கால நீட்டிப்பையும் வழங்கிட வேண்டும்.
உலக அளவில் கரோனாவால் தொழில் பொருளாதாரத்தில் ஏற்ப்பட்டுள்ள பாதிப்புகளை ஈடுசெய்வதற்கு விவசாயப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். இதற்காக விவசாய உற்பத்தியை இந்தியாவில் பல மடங்கு உயர்த்த வேண்டுமெனவும், அதற்காக அந்நிய முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென பிரதமர் மோடி கடந்த வாரம் நிதியமைச்சக உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் செய்துள்ளார். இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
குறிப்பாக உற்பத்தி பொருள் அழியும் போது வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு தேவை அதிகரிக்கும் போது அந்நிய முதலீட்டை விவசாயத்தில் அனுமதிப்பது நியாயமா? விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை முழுமையாகக் கைவிட வேண்டும். குடிமராமத்து திட்டத்தில் விவசாயிகள் பங்களிப்புடன் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
சென்ற ஆண்டு காவிரி டெல்டாவில் தூர் வார சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டதில் 40% பணிகள் தண்ணீர் திறக்கப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டு 2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தூர் வாரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அப்பணிகளின் நிலை குறித்து பொதுப்பணித்துறை உரிய விளக்கமளிக்க வேண்டும். காவிரி, பேச்சிப்பாறை, தாமிரபரணி பாசனப் பகுதிகளில் உள்ள பாசன வடிகால்கள் தூர்வார போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்ய வேண்டும். உடனடியாக இவ்வாண்டு வேளாண் கடன் நிபந்தனையின்றி வழங்க முன் வரவேண்டுமென தீர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்க மறுத்தால் வரும் 17ஆம் தேதிக்குப் பிறகு தீவிரமான போராட்டங்களில் களமிறங்குவோம் எனவும் எச்சரிக்கிறோம் என்றார்.