Skip to main content

ஞானதேசிகன் மறைவுக்கு தலைவர்கள் அஞ்சலி...

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 

tamilnadu politicians mourns gnanadesigan

 

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

 

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல்  இன்று காலமானார். இந்நிலையில், ஞானதேசிகன் மறைவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தமிழ் மாநில காங்கிரஸின் துணை தலைவர்  திரு. ஞானதேசிகன் அவர்கள் இயற்கை எய்தினார் எனும் துயர செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அன்னாரின் ஆன்மா இறைவனடியில் இளைப்பாற பிரார்த்தனை செய்வதோடு குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "த.மா.கா துணை தலைவரும் கலைஞரின் நெருங்கிய நண்பருமான ஞானதேசிகன் அவர்கள் மறைவெய்தியதை அறிந்து மிகுந்த மனவேதனைக்குள்ளானேன். இந்திய, தமிழக அரசியலில் பெரும்பங்காற்றிய அவர் நம் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் கொண்டவர். அவரை பிரிந்து வாடும் உற்றார் உறவினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" எனத் தெரிவித்துள்ளார். 

 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "முன்னாள் தலைவரும், மாநிலங்களவை காங்கிரஸ் முன்னாள் உறுப்பினருமான திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்கள் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இளமைப் பருவம் முதல் பெருந்தலைவர் காமராஜர் மீது பற்றுகொண்டு மாணவர் காங்கிரஸில் தம்மை இணைத்துக்கொண்டவர்.

 

அன்னை இந்திரா காந்தி, அமரர் ராஜீவ் காந்தி, அன்னை சோனியா காந்தி ஆகியோரின் நம்பிக்கையை பெற்றவர். மறைந்த மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்று அவரது தலைமையில் தீவிரமான அரசியல் பணிகளை மேற்கொண்டவர். சிறந்த வழக்கறிஞர். பழகுவதற்கு இனிய பண்பாளர்.

 

தம் வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாக வாழ்ந்து மறைந்த திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். திரு பி.எஸ்.ஞானதேசிகன் அவர்களது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், இயக்க நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான பி.எஸ். ஞானதேசிகன் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

 

தமிழக அரசியலில் அனைத்துக் கட்சியினரிடமும் நட்பு பாராட்டிய, அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் தலைவர்களில் ஞானதேசிகனும் ஒருவர். அரசியலில் பதவிக்கு ஆசைப்படாதவர்.  கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருப்பது எப்படி? என்பதற்கு சிறந்த முன்னுதாரனமாக திகழ்ந்தவர்.

 

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். அரசியலைக் கடந்து என் மீது மிகுந்த பற்றும், மதிப்பும் கொண்டவர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றியவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஞானதேசிகன் விரைவில் உடல்நலம் தேறி திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது இறப்புச் செய்தியை எதிர்பார்க்கவில்லை.

 

அவரை  இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், த.மா.கா தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள செய்தியில், "தமாகா'வின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரும் மேனாள் எம்.பி.யுமான திரு. ஞானதேசிகன் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. 

 

மூப்பனார் அவர்களின் வழிகாட்டுதலில் எனது 'தேர்தல் வழக்கை' (1999) நடத்தியவர். 

 

அவருடைய மறைவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

 

 
 

சார்ந்த செய்திகள்