தமிழக பா.ஜ.க.வுக்குப் புதிய தலைவரை விரைவில் நியமிக்க போவதாக தகவல் பரவிக் கொண்டிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்றார். அதன் பின்பு தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து அடுத்த தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அடுத்த பாஜக ரேஸில் குப்புராமு, எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், கே.டி.ராகவன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், ஏ.பி. முருகானந்தம் ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.
இந்த நிலையில் தமிழக பா.ஜ.க தலைவர் நியமனம் தொடர்பாக 5ஆம் தேதி கமலாலயத்தில், மாநில துணைத் தலைவர் குமாரராவ் தலைமையில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் தேசிய இணை அமைப்புச் செயலாளர் சிவப்பிரகாசமும், தேசிய செய்தித் தொடர்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான நரசிம்மராவும் அகில இந்திய பா.ஜ.க. சார்பில் கலந்து கொண்டார்கள். இந்தக் கூட்டத்தில் தன் பெயரை யாருமே பரிந்துரைக்க மாட்டார்கள் என்று புரிந்து கொண்ட பொன்னார், கூட்டம் தொடங்கும் முன்பாகவே, அகில இந்தியப் பிரதிநிதிகளிடம் தான் தலைவர் பதவியை விரும்புவதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார் என்கின்றனர். எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக காத்திருந்தார் நயினார் நாகேந்திரன். பேசிய பலரும், சீனியர்களுக்கு தலைவர் பதவி கொடுங்கள். ஆனால் மற்ற கட்சியில் இருந்து வந்தவங்களுக்குக் கொடுக்காதீங்க என்று பேச, நயினாரும் அப்செட் ஆனதாக சொல்லப்படுகிறது.