தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. முதல் நாளான இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கு மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.
ஆளுநர் உரையாற்றுகையில் அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தையை ஆளுநர் தவிர்த்துள்ளார். அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்கு பதில் 'திஸ் கவர்ன்மென்ட்' என மாற்றியுள்ளார். இதனை எதிர்த்து திமுகவின் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர், ஆளுநர் தனது உரையைத் தொடர்ந்தார். அப்போது சில சட்டமன்ற உறுப்பினர்கள் 'தமிழ்நாடு வாழ்க' எனக் கோஷமிட்டனர்.
ஆளுநர் உரைக்குப் பின் பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார். அதன்பின் தமிழக முதல்வர் பேசுகையில், “உரையை முறையாக ஆளுநர் படிக்கவில்லை. இது விதியை மீறிய செயலாகும். சட்டமன்ற விதி எண் 17-ஐ தளர்த்தி இன்று அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவரால் படிக்கப்பட்ட தமிழ் உரை மட்டும் அவைக் குறிப்பில் ஏற வேண்டும் என்ற தீர்மானத்தையும்....'' என முதல்வர் வாசிக்க, அங்கிருந்து விறுவிறுவென எழுந்து நடந்து தமிழக ஆளுநர் வெளிநடப்பு செய்தார். அவையின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே ஆளுநர் வெளியேறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை சட்டப்பேரவையில் படிக்கும்போது சில வார்த்தைகளையும் சில பத்திகளையும் ஆளுநர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் சட்டப்பேரவையையும் அவமதிக்கும் செயலாகும். தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை; ஆளுநருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பதுதான் நாகரிகமும் மரபும் ஆகும்.
அச்சிடப்பட்ட ஆளுநர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்தபோது, அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுநர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும் ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுநரும் அரசும் இணைந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்து உள்ளார்.