Stalin's statement Tamil Nadu government should send 1.24 crore rupees to German university

2019-ஆம் ஆண்டு அரசு அறிவித்தபடி, ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்திற்கு 1.24 கோடி ரூபாயை தமிழக அரசு அனுப்பிட வேண்டும். மேலும் தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்குத் தக்க சின்னமாக உள்ள இந்த ஆய்வு நிறுவனம், தொடர்ந்து செயல்பட ஏதுவாக இந்த நிதி சென்றடைவதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; “ஜெர்மனி நாட்டின் கொலோன் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘இந்தியவியல் தமிழியல் ஆய்வு நிறுவனம்’ மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மிகத் தொன்மை வாய்ந்த செம்மொழித் தமிழ்மொழியினைக் கற்று, அதன்மீது மிகுந்த ஆர்வம்கொண்டு, ஜெர்மனியின் தமிழ் அறிஞரான பேராசிரியர் டாக்டர் க்ளவுஸ் லுட்விட் ஜெனரட் என்பவரால் அப்பல்கலைக்கழகத்தில் 1963-ல் ஆரம்பிக்கப்பட்டதுஇந்த ஆய்வு நிறுவனம்.

இங்கு, முனைவர் பட்டத்திற்கு 5 படிப்புகள் உட்பட, தமிழில் இளங்கலை படிப்பும் இருக்கிறது. ஆய்வு நிறுவன நூலகத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஓலைச்சுவடிகளும் இருப்பது தனிச்சிறப்பு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் ஆய்வு நிறுவனம், நிதிப் பற்றாக்குறையால் மூடப்படுகிறது என்று முன்பு வெளிவந்த செய்தியை அடுத்து, தமிழக அரசின் சார்பில் 1.24 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று 2019-ல் கூறப்பட்டு, கொரோனாவால் அந்தத் தொகை வழங்கப்படவில்லை என்று செய்தி வெளிவந்துள்ளது. ‘கொரோனாவில் கொள்ளையடித்த’ அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால், மார்ச் 31-ஆம் தேதியுடன் மீண்டும் அந்த ஆய்வு நிறுவனம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க. அரசு, இப்போதாவது இந்த 1.24 கோடி ரூபாயைக் கொலோன் பல்கலைக்கழகத் தமிழ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் பெருமைக்குத் தக்க சின்னமாக உள்ள இந்த ஆய்வு நிறுவனம், தொடர்ந்து செயல்பட்டிட ஏதுவாக கொலோன் பல்கலைக்கழகத்திற்கு உடனடியாக 1.24 கோடி ரூபாய் நிதி சென்றடைவதற்கு மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.