தமிழ் மொழி மேம்பாட்டிற்கு திமுக அரசு எதுவும் செய்யவில்லை எனக் கூறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடலூரில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் ஆர்ப்பாட்டத்தில், “தமிழகத்தில் பாஜகவின் போராட்டம் என்பது முதலும் கடைசியுமாக இருக்கட்டும். மீண்டும் இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் ஆங்கிலத்தைப் புகுத்த முயற்சித்தால் மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் அளவிற்கும் பேசும் அளவிற்கும் தயாராக இருக்கிறார்கள். மக்கள் அவர்கள் பேசுவதைக் கேட்பதற்கு தயாராக இல்லை” எனக் கூறியிருந்தார்.
ஆர்ப்பாட்டம் முடிந்ததும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைச் செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பிய நிலையில் அவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார். செய்தியாளர்களை நோக்கி பேசிய அண்ணாமலை ''என்ன மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி எல்லாம் சுத்தி சுத்தி வரீங்க. என்ன இது.. நான் சாப்பிட போகும்போது என்ன சொல்லிட்டுப் போனேன். மரியாதையாக நின்று நீங்க எல்லாம் சாப்பிடுங்க என்று சொல்லிவிட்டு போனேன். ஊர்ல நாய், பேய், சாராயம் விக்கிறவர் சொல்றதுக்கு எல்லாம் பதில் சொல்லணுமா..நவுருங்க..'' எனப் பேசினார். (அமைச்சர் மற்றும் பத்திரிக்கையாளரை ஒருமையில் பேசினார்).
இதனைத் தொடர்ந்து, கடலூரில் அண்ணாமலையைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அண்ணாமலையின் உருவ பொம்மை மற்றும் அவரது உருவப் படங்களை எரித்துக் கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.
இந்நிலையில், தனது உருவ பொம்மை எரிப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “எனது உருவ பொம்மையை ஊர்வலமாக எடுத்துச் சென்று எரித்து நேரத்தை வீணடிக்காமல், கோவை குண்டுவெடிப்பு பற்றி உங்கள் கட்சித் தலைவர் மற்றும் தமிழக முதல்வரை பேசச் சொல்லுங்கள் என்று திமுகவினரை கேட்டுக்கொள்கிறேன். அதுவே தமிழக மக்களுக்கு அவர் ஆற்றும் பெரும் சேவையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.