சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, 'மூன்று வயதிலேயே மூன்று மொழிக்கல்வி திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் இதனை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..?'' எனக் கூறியிருந்தார்.
சூர்யாவின் பேச்சுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடுமையாக சாடியிருந்தனர். அதேபோல், சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவாக டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த கமல்ஹாசனுக்கு சூர்யா நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ''வணக்கத்திற்குரிய திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு,
கல்வி கொள்கை தொடர்பான என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும், எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும், தங்களின் மக்கள் நீதி மய்யம் அமைப்பிற்கும் என்னுடைய நன்றிகள்.
திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் தங்களின் ஆதரவு கல்வி பணியில் தொடர்ந்து தீர்க்கமாக செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவிற்கு மீண்டும் என் நன்றிகள்''. அன்புடன் சூர்யா என அதில் கூறப்பட்டுள்ளது.