
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். தொடர்ந்து அமைச்சரவையிலும் அவருக்கு இடம் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக கடந்த செப்டம்பர் முதல் பதவி வகித்து வருகிறார்.
ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், செந்தில் பாலாஜி உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (24-03-25) மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்சநீதிமன்றம், ‘அமைச்சராக தொடர விரும்புகிறீர்களா என்பதை தெரிவிக்கும்படி கூறியிருந்தோம். ஆனால், அதனை செந்தில் பாலாஜி தரப்பு முறையாக பின்பற்றவில்லை. வழக்கில் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை என்பதை அனுகூலமாக எடுத்துக் கொள்கிறீர்களா?காலம் தாழ்த்துவது சரியான நடைமுறை அல்ல, இதற்கு மேல் கூடுதல் அவகாசம் வழங்கமுடியாது. எனவே, இது குறித்து 10 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு செந்தில் பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.