கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மற்றும் அறப்போர் இயக்கம் சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த வழக்கில், விசாரணையை 10 வாரங்களில் முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பரில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை மூன்று வாரத்திற்குள் உயர்நீதிமன்ற பதிவாளர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.