இன்று(8.10.2021) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் உ.பியில் நடந்த 8க்கும் மேற்பட்டோரின் கொடூரப் படுகொலையைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன் பேசியதாவது, “உ.பி. லக்கிம்பூர் என்னும் இடத்தில் கடந்த அக்.3ஆம் தேதி அறவழியில் போராடிய விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்த இணை அமைச்சரின் மகன் காரை ஏற்றிப் படுகொலை செய்துள்ளார். இது இந்தியாவிற்கு மிகப் பெரிய வெட்கக்கேடான நிகழ்வாகும்.
இது போன்ற ஒரு காட்டுமிராண்டித்தனம் இதுவரை அரசியல் களத்தில் நிகழ்ந்தது இல்லை. பல நாட்கள் போராடுவது என்பது ஜனநாயக நிகழ்வில் வழக்கமான ஒன்றுதான். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் அறவழியில் போராடி வருகிறார்கள். இதனை நசுக்க நினைக்கும் பாஜகவினர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் விவசாயிகளின் போராட்டங்களை அவர்களால் தடுக்க முடியவில்லை. அக்3 ஆம் தேதி இந்த வன்முறை நிகழ்வு நடப்பதற்கு முன்பு நடைபெற்ற ஒரு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய இணையமைச்சரின் மகன் ஆஷிஸ்மிஸ்ரா விவசாயிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியிருக்கிறார். இரண்டே நிமிடங்களில் இந்த போராட்டத்தை நான் ஒரு முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன் என எச்சரித்திருக்கிறார்.
அதன் அடிப்படையில் இரண்டு நாட்கள் இடைவெளியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆஷிஸ்மிஸ்ரா பயணித்த வண்டி விவசாயிகளின் மீது மோதி அவர்களை படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. மனசாட்சி உள்ள எவராலும் இதை சகித்துக்கொள்ள முடியாது. ஆனால் பிரதமர் மோடி இது வரை வாய்திறக்கவில்லை. கிரிக்கெட் வீரருக்கு முட்டியில் காயம் ஏற்பட்டால் அதற்கு டீவிட் செய்கிற மோடி இந்த கொடூரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது பேரதிர்ச்சி ஆக இருக்கிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு இதற்கு முழு பொறுப்பேற்று யோகி ஆதித்தயநாத் முதல்வர் பதவியிலிருந்து பதவி விலக வேண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவித்தார்.