மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தந்தை பெரியார் தன் வாழ்நாளில் எத்தனையோ விழாக்களை எடுத்திருந்தாலும் 1948 ஆம் ஆண்டில் அவர் திருக்குறளுக்கு விழா எடுத்தார். அந்த விழாவில் பட்டுக்கோட்டை அழகிரிசாமியைக் கொண்டு தாளமுத்து நடராசனின் சிலையைத் திறக்க வைத்தார். அவர் 49ல் திருக்குறள் மாநாட்டை நடத்தினார்.
இவை எல்லாம் தன் நெஞ்சில் ஆழப் பதிந்துவிட்ட நிலையில், கலைஞர் தன் 16 வயதில் இந்தி எதிர்ப்பு போர்க்களத்தில் நுழைந்த நாள் முதல் எண்ணற்ற போர்க் களங்களை நடத்தியவர். அது கல்லக்குடி போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம், நெருக்கடி நிலை போராட்டம் என தனது இறுதி மூச்சு வரை போராட்டம் நடத்தியவருக்கு நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் உரையாற்றும் சந்தர்ப்பத்தினை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி” எனக் கூறினார்.