Skip to main content

சிலை அரசியலை தயவுசெய்து நிறுத்துங்கள்! - நடிகர் பிரகாஷ்ராஜ் வேண்டுகோள்

Published on 07/03/2018 | Edited on 07/03/2018

நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சிலை அரசியலை தயவுசெய்து நிறுத்துங்கள் என நடிகர் பிரகாஷ்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

திரிபுரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், அம்மாநிலத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சிசெய்து வந்த சி.பி.எம். ஆட்சி அதிகாரத்தை இழந்து, பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து அம்மாநிலத்தில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இரண்டு இடங்களில் சோவியத் புரட்சியாளர் லெனின் சிலை உடைக்கப்பட்டது. 

 

தமிழகத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் எச்.ராஜா தனது முகநூல் பக்கத்தில், இன்று திரிபுராவில் லெனின் சிலையைப் போல, நாளை தமிழகத்தில் பெரியாரின் சிலையை அகற்றுவோம்’ என சர்ச்சையைக் கிளப்பும்விதமாக பதிவிட்டு, பின்னர் நீக்கியிருந்தார். மேலும், அந்தப் பதிவு தன்னுடையது அல்ல எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இருந்தும், நேற்று இரவு வேலூர் மாவட்டத்தில் பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டது.

 

 

 

 

இன்று காலை கொல்கத்தாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஷியாம பிரசாத் முகர்ஜீயின் சிலையை சேதப்படுத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது உத்தரப்பிரதேசம் மாநிலம் மீரூட்டில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ், ‘லெனின், பெரியார், எஸ்.பி.முகர்ஜீயின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. உங்கள் நிகழ்ச்சி நிரல் என்ன? நம் குழந்தைகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறீர்கள்? இந்த சிலை அரசியலை தயவுசெய்து நிறுத்துங்கள்.. வன்முறை மூலம் வன்முறையையே அறுவடை செய்யமுடியும். உங்களின் அரசியல் வாக்குறுதி என்ன? மாற்றமா அல்லது மாநிலத்தில் குண்டாயிஸத்தைக் கொண்டுவருவதா? #JustAsking’ என பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்