கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா இல்லத்தின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிவமோஹா மாவட்டம் ஷிகாபுரி தொகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை பஞ்சாரா சமூகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து பிரதமர் மோடி, கர்நாடகத்தின் தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா ஆகியோருக்கு எதிராக பஞ்சாரா சமூகத்தினர் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.
கர்நாடகத்தில் கடந்த வாரம் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு 2 பழங்குடியின சமூகத்தினருக்கு தலா 2% உள் ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாரா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த உள் ஒதுக்கீடு தொடர்பாக, ஏ.ஜே.சதாசிவ குழுவின் அறிக்கையை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் மாநில அரசின் முடிவை எதிர்த்து போராட்டம் செய்த பஞ்சாரா சமூகத்தினர், இடஒதுக்கீட்டிற்காக பல நாட்களாக போராடி வருவதாகவும் எங்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கூறினர். நேரம் செல்ல செல்ல போராட்டம் வன்முறையாக மாறியது. எடியூரப்பாவின் வீட்டின் மீது பறந்த பாஜக கொடியை அகற்றி எரிந்த போராட்டக்காரர்கள் பஞ்சாரா சமூகத்தின் கொடியை ஏற்றினர்.
முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டை முற்றுகையிட்டு வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் எடியூரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோரது உருவப்படங்களை எரித்து போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மேலும் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.