ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தெளிசாத்த நல்லூர் கிராமத்தில் மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கமல்ஹாசனுக்கு சொந்தமாக இடம் உள்ளது. அங்கு அவரது தந்தை சீனிவாசனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) கமல்ஹாசனின் பிறந்த நாளாகும். இதையொட்டி நாளை நடைபெறும் விழாவில் தனது தந்தையின் சிலையை கமல்ஹாசன் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர், எமனேசுவரம் ஆகிய இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார். இதையடுத்து அவரது தந்தை வக்கீலாக பணியாற்றிய பரமக்குடி கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் தந்தை சீனிவாசன் உருவ படத்திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.
இந்தநிலையில் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பரமக்குடியில் என் தந்தை சிலையை திறக்க உள்ளேன். அப்போது என்னை வரவேற்கும் வகையில் தொண்டர்கள், ரசிகர்கள் யாரும் பொது மக்களுக்கு இடையூறாக பேனர்கள், கொடிகள் எதுவும் வைக்க வேண்டாம். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இந்த விசயத்தில் எவ்வித காரணங்களும் ஏற்கப்படாது என்பதை கண்டிப்பாக சொல்லிக்கொள்கிறேன். இனி நிகழவுள்ள அரசியல் மற்றும் ஆட்சி முறையில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஏற்படுத்த உள்ள மாற்றங்களை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பது என் விருப்பம். இவ்வாறு கூறியுள்ளார்.