தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக கட்சிச் சார்ந்த வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதுரை மாவட்டம் 58வது வார்டில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட விதமும், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் ஆதரவும் மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியை பொறுத்தவரை 100 வார்டுகளில் திமுக 77 வார்டுகளில் நிற்கிறது. மீதம் உள்ள 23 வார்டுகளில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 9, கம்யூனிஸ்ட் 8, விசிக 3 என போட்டியிடுகிறது. அதிமுக 100 வார்டுகளிலும் மற்றும் பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக என களத்தில் நின்றாலும் போட்டி என்னமோ திமுக, அதிமுகவிற்குமே. இந்நிலையில், மதுரை திமுகவின் இளைஞரணி செயலாளரும் 58வது வார்ட்டில் போட்டியிடும் மா.ஜெயராமன் செண்டமேள தாளங்கம் மற்றும் நடனத்தோடு மக்களிடம் மாஸ் காட்டி ஓட்டு கேட்டது அந்த வார்டு மக்களை ஈர்த்தது. மேலும், அவர் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவை பிரச்சாரத்தின் போது சந்தித்து அவரது ஆதரவை கோரினார். சாலமன் பாப்பையாவும் அவர் ஆதரவை திமுக வேட்பாளர் ஜெயராமனுக்கு அளித்தார்.