Skip to main content

தேர்தல் அரசியலில் இருந்து விலகும் சித்தராமையா!

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

Siddaramaiah will retire from election politics!

 

கர்நாடக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே மாதத்துடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அம்மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல் வரும் மே மாதம் 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் தங்களது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவித்த பிறகு பாஜகவும் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. 

 

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில் இழந்த ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும், இருக்கும் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோன்று காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

 

கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு ஆதரவாக வந்து கொண்டிருக்கும் நிலையில், பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளராக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பை பாஜக களமிறக்கியுள்ளது. இதனை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ள நிலையில், பாஜக காங்கிரஸுக்கு பதிலும் கொடுத்துள்ளது. 

 

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேர்தலே எனது கடைசி தேர்தலாக இருக்கும் என கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறியுள்ளார். பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “எனது சொந்த கிராமம் வருணா சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருவதால் நான் அத்தொகுதியில் போட்டியிடுகிறேன். இதுவே எனது கடைசி தேர்தலாகும். தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சித்தராமையா கூறுவது இது முதல்முறையல்ல என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 2013ல் கர்நாடக மாநிலத்தின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் சித்தராமையா அறிவித்தார். ஆனால். 2018 சட்டமன்றத் தேர்தலின் போது, அவர் பாதாமி மற்றும் சாமுண்டேஸ்வரி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். 

 

2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போதும், மீண்டும் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டார். அப்போது 2023 மாநிலத் தேர்தலில் எந்த இடத்திலும் போட்டியிடப் போவதில்லை என்று மீண்டும் அறிவித்தார். இந்நிலையில் தற்போது வருணா மற்றும் கோலார் தொகுதிகளில் மீண்டும் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.