








திமுகவின் முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் 98வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, கொருக்குப்பேட்டை, மண்ணப்பன் தெரு, எச் - 4 காவல் நிலையம் அருகில் மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் லெட்சுமி வேலு ஏற்பாட்டில் 198 ஏழை எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் சென்னை வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் தா. இளைய அருணா, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே. எபினேசர், ஆர்.கே.நகர். கிழக்கு பகுதி பொறுப்பாளர் வெ. சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மகளிர் அணி துணை அமைப்பாளர் லெட்சுமி வேலுவின் கணவர் வேலு, கொருக்குப்பேட்டை பகுதியில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமான்கள் கடை நடத்திவருகிறார். இவரது கடை குடோனில் கடந்த 28.06.2021 திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் தீப்பற்றி எரிந்தது. சுமார் 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் சுமார் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. எபிநேசர், திமுக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் இளைய அருணா ஆகியோர் லட்சுமி வேலு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
தீ விபத்தினால் மனதளவில் சோகமாக இருந்தாலும், எந்தக் காரணம் கொண்டும் விழா ரத்தாகிவிடக்கூடாது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த லெட்சுமி வேலு, கடந்த ஒருவார காலமாக அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து இன்று அவ்விழாவினை நடத்தியுள்ளார். அவரின் இந்தச் செயலைப் பார்த்து நெகிழ்கிறார்கள் உடன்பிறப்புகள்.