இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பதில் மூன்று சாதிகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை வன்னியர், முதலியார், பட்டியலினச் சமூகம். கடந்த தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாமக இந்த தொகுதியில் உள்ள 75 ஆயிரம் வன்னியர் வாக்குகளில் 50 ஆயிரம் வாக்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏவும், தொழிலதிபருமான முனிரத்தினம் நின்றுள்ளார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு, எனக்கு சீட் தாங்க நான் உங்க கட்சிக்கு வந்துவிடுகிறேன் என திமுக தலைமையிடம் பேரம் பேசினார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பியும், முன்னாள் எம்.எல்.ஏவுமான முனிரத்தினம். அவரின் பண செல்வாக்கு மற்றும் மக்கள் செல்வாக்கை அறிந்திருந்த காங்கிரஸ் தலைமை, உங்களுக்கே சோளிங்கர் தொகுதியை வாங்கித் தருகிறோம், கட்சி மாறாதீர்கள் என சமாதானம் செய்தது. சொன்னதுபோலவே சீட் வாங்கி தந்தார் காங்கிரஸ் தலைவர் அழகிரி. திமுகவுக்கு சரியான வேட்பாளர் இந்த தொகுதியில் இல்லாததால் அவர்களும் ஒதுக்கி தந்துவிட்டனர். முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த முனிரத்தினம், மக்களிடம் ஓரளவு செல்வாக்குப் பெற்றவர், ஆனாலும் தொடர்ந்து அவருக்கே சீட் தருவதால் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் அதிருப்தி நிலவுகிறது. இவர் முதலியார் சாதியின் முக்கியப் பிரபலம். தொகுதியில் சாதி கடந்து அனைத்துச் சாதி மக்களின் செல்வாக்கும் பெற்றவர்.
இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவான சம்பத்துக்கு அதிமுக தலைமை சீட் தரவிரும்பியது. இது எங்களுடைய கோட்டை என விடாப்பிடியாக இந்தத் தொகுதியை அதிமுக கூட்டணியில் உள்ள பாமக வாங்கியது. 2016ல் தனித்து நின்று 52 ஆயிரம் வாக்குகளை பாமக இந்த தொகுதியில் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிமுக கூட்டணி இருப்பதால் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்பி மா.செ கிருஷ்ணன் களத்தில் உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கடும் சவாலாக இருப்பவர் கடந்த முறை அதிமுக மா.செவாக இருந்து இந்தத் தொகுதியில் வெற்றிபெற்ற வழக்கறிஞர் பார்த்திபன், இந்த முறை அமமுக வேட்பாளராகக் களத்தில் உள்ளார். இவர் முதலியார் என்பதால் முதலியார் வாக்குகளில் பிரிவு ஏற்படுகிறது. இது காங்கிரஸுக்கு பின்னடைவு என்றாலும் தொகுதியில் உள்ள 43 ஆயிரம் பட்டியலின வாக்குகள், சிறுபான்மையின வாக்குகள், யாதவர் வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு சாதகமாக உள்ளன என்கிறார்கள் தொகுதியின் பல்ஸ் அறிந்தவர்கள்.
கிராமம் கிராமமாகச் சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள் வேட்பாளர்கள். காங்கிரஸ் முனிரத்தினம் ஜீப்பை விட்டு இறங்கி ஓட்டு கேட்பதில் சுணக்கம் காட்டுவது திமுக தொண்டர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. பாமக வேட்பாளர் கிராமங்களில் நடந்து ஓடிச்சென்று வாக்கு கேட்கிறார். தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலும் அதே அளவுக்குள்ள பட்டியலின, பிற சாதி ஓட்டுகள் மாம்பழத்துக்கு நெகட்டிவாக உள்ளது. அந்த ஓட்டுக்களை கவர அதிமுக பிரமுகர்களைப் பெரிதும் நம்புகிறார். காங்கிரஸ் முனிரத்தினத்துக்கு செல்ல வேண்டிய ஓட்டுக்களை அமமுக பார்த்திபன் சாதி ரீதியாகப் பிரிப்பார் என நம்பிக்கையில் பாமக வேட்பாளர் உள்ளார்.
இந்த தொகுதியில், காங்கிரஸ் – பாமக இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொகுதியில் 30 ஆயிரம் வாக்குகள் ரஜினி மக்கள் மன்ற மா.செ ரவியிடம் உள்ளது. இதனால் அவரது ஆதரவை வாங்கி கணிசமான ஓட்டு வாங்கிவிட வேண்டுமென அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் முட்டி மோதுகின்றனர்.