சென்னையில் கடந்த 18 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்கூட்டம் ஒன்றியில், அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது” எனப் பேசியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “நாம முன்னுக்கு வரணும்னா நாய் என்ன... மனுஷன் என்ன? ஏறி மிதிச்சு போயிட்டே இருக்கணும் - அமைதிப்படை படத்தில் வரும் டயலாக் இது. அதில் வரும் அமாவாசை கேரக்டர் தான் எடப்பாடி பழனிசாமி. பலரை ஏறி மிதித்து, ஊர்ந்து சென்று, பதவியைப் பிடித்த பழனிசாமி, திமுக ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது எனப் பேசியிருக்கிறார். ஆட்சியை இழந்த இந்த நான்கு ஆண்டுக் காலத்தில் அமாவாசையென உருட்டியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இப்படி ஒவ்வொரு அமாவாசைக்கும் பழனிசாமி கணக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். அமாவாசைகள்தான் கடந்து சென்று கொண்டிருக்கிறன. ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடாமல் புறமுதுகிட்டு ஓடும் 23ஆம் புலிகேசி பழனிசாமி, இன்னும் நூறு பௌர்ணமிகளுக்கு மு.க. ஸ்டாலின் தான் முதலமைச்சராகத் தொடர்வார் என்பதை 2026இல் உணர்ந்து கொள்வார்” எனப் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, எடப்பாடி பழனிசாமி, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தான் அமைதிப்படை அமாவாசை கேரக்டர் என்பது பொருத்தமாகும். அவருக்குப் பொருத்தமான பெயரை அவரே தேடிக்கொண்டார். ஐந்து கட்சிகளுக்கு மாறியவர்தான் செந்தில் பாலாஜி. தற்போது திமுகவில் உள்ளார் அடுத்து எந்த கட்சிக்கு செல்வார் என்று தெரியவில்லை. ஐந்து ஆண்டுகளில் இரண்டு கட்சி சின்னத்தில் நின்று போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி தான். அதாவது ஐந்தாண்டுகளில் ஒரு முறை இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு முறை உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிட்டார். அப்படிப்பட்ட பெருமைக்குரிய மனிதர்தான் செந்தில் பாலாஜி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருக்கும்போது சட்டமன்றத்தில் மறைந்த திமுக தலைவர் கலைஞரை பற்றியும், அக்கட்சி பற்றியும், முக்கிய தலைவர்கள் பற்றி பேசியது எல்லாம் சட்டமன்றத்தின் அவை குறிப்பில் உள்ளது. அதை நீக்கவே முடியாது. அதனை மறந்து பேசிக் கொண்டுள்ளார்.
மற்றொரு அமைச்சர் சேகர்பாபு. அவரும் அமவாசை பற்றி பேசிக்கொண்டிருக்கிறார். மாதம் மாதம் அமாவாசை வருகிறது. ஒவ்வொரு மாதமும் திமுக ஆட்சியின் காலம் குறைந்து கொண்டே வருகிறது. அதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன். ஆளுங் கட்சியாக இருக்கும் போது திமுகவை எப்படி விமர்சனம் செய்கிறார் என்று அவை குறிப்பில் உள்ளது. அதனை எல்லாம் மறந்து பேசிக் கொண்டுள்ளனர். இவர்களெல்லாம் அரசியல்வாதிகள் இல்லை. அரசியல் வியாபாரிகள். உண்மையான அரசியல்வாதியாக இருந்தால் அந்த கட்சியிலேயே இருக்க வேண்டும்” என்று விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எடப்பாடி பழனிசாமிக்கு காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார். பழனிசாமி தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்; தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.
புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும். அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்”எனக் குறிப்பிட்டுள்ளார்.