
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதன்படி இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை விசாரிக்கத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் நேற்று (13.02.2025) வழங்கப்பட்ட் தீர்ப்பில், “கட்சியின் சின்னம் தொடர்பான விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுகிறது. எனவே இரட்டை இலை சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம். அதோடு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்துவதற்குத் தடைகோரிய எடப்பாடி பழனிசாமியின் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தீர்ப்பு அளித்திருந்தனர்.
இதற்கிடையே அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவினாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை. என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தைக் கொண்டுவர 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ. 3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளைத் தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எந்த நிலையிலும் அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என எண்ணுபவர் செங்கோட்டையன். அவர் மீது எந்த அதிருப்தியும் எங்களுக்கு இல்லை. மற்றபடி அவர் எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறாரா என்பதற்கு செங்கோட்டையன்தான் பதில் சொல்ல வேண்டும். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தவிர வேறு யாரும் உரிமை கோர முடியாது.

அதிமுகவில் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமித்ஷா எவ்வளவோ விரும்பி சொன்னார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எதையும் ஏற்கவில்லை. அதிமுக ஒன்றிணைந்துவிட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதுதான் நல்லது என நான் கருதுகிறேன். 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அனைவரும் ஒன்றானால் வாழ்வு. இல்லையென்றால் எல்லாருக்கும் தாழ்வு. எந்த நிபந்தனையும் இல்லாமல் நான், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் அதிமுகவில் மீண்டும் இணைய தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார். அதோடு அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்களது கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.