Skip to main content

“அந்த உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது” - முகவர்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தல் 

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
selvaperunthagai instruction Under no circumstances shall that right be waived

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக நடைபெற்றது. அதன்படி, கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி, முதல் கட்டமாகத் தமிழகம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் 18வது ஜனநாயகத் திருவிழா தொடங்கி, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 என ஒவ்வொரு தொகுதிகளிலும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று நேற்று (01-06-24) 6 மணியுடன் முடிவடைந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘2024 மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்து ஜூன் 4 அன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்குகிற போது முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணி முடிந்த பிறகுதான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட வேண்டும். தபால் வாக்குகள் எண்ணிக்கையை எந்த காரணம் கொண்டும் தாமதப்படுத்தாமல் விரைவாக எண்ணி அதனுடைய முடிவுகளை உறுதி செய்ய வேண்டும். 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பேட்-ஐ எண்ணுவதற்கு முன்பாக இயந்திரங்களில் இருக்கும் சீல்கள் சரியாக இருக்கிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து படிவம் 17 சி-இல் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். 17 சி படிவத்தில் உள்ள பதிவான வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒத்துப்போகிறதா என்பதை ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும். எந்த வாக்குப்பதிவு இயந்திரத்திலாவது சீல்கள் சேதமடைந்திருந்தாலோ, இயந்திரத்தின் எண் ஒத்துப்போகவில்லை என்றாலோ அந்த இயந்திரத்தை அனுமதிக்காமல் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிற போது இது குறித்த தேர்தல் ஆணைய கையேடுகளையும், அதற்குரிய சட்ட புத்தகங்களையும் எடுத்துச்செல்வதோடு அதுபற்றிய முழு விபரங்களை அறிந்துகொள்ள வேண்டும். எனவே வாக்கு எண்ணும் மையங்களுக்குக் காலை 6 மணிக்கெல்லாம் சென்று எந்த விதமான தவறுகளும் நடக்க வாய்ப்பளிக்காமல் முகவர்கள் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 39 மையங்களில் 43 கட்டிடங்களில் உள்ள 234 அறைகளில் நடைபெறுகிறது. ஒரு வாக்கு எண்ணிக்கை அறையில் 16 க்கும் மேற்பட்ட  மேஜைகள் போடப்பட்டிருக்கும். ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் மேஜைகள் தனியாகப் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அப்படி வாக்குகள் எண்ணப்படுகிற மேஜையில் துணை தேர்தல் அதிகாரியோடு வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அமருவதற்கு உரிமை இருக்கிறது. அந்த உரிமையை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது. மிகுந்த விழிப்புணர்வோடு காலை 6 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நிறைவடைகிற வரை வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா; தமிழக காங்கிரஸ் கண்டனம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Congress condemns Karnataka government on Cauvery issue

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும். 

காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி.யும் ஆக மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு கடந்த 10 ஆம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டி.எம்.சி. தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12 ஆம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டி.எம்.சி. வீதம் ஜூன் 31 ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதலமைச்சர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

மக்களவைத் தேர்தல் தோல்வி; எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
Lok Sabha election failure Edappadi Palaniswami advice

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

அதே சமயம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றது. புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாகக் கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக இன்று (10.07.2024) முதல் வரும் 19 ஆம் தேதி வரை தொகுதி வாரியாக மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். அதன்படி இன்று காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிக்குட்பட்ட தலா 6 சட்டமன்றத் தொகுதிகளின் நிர்வாகிகளிடம் தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கக் கூடிய நிர்வாகிகள் செல்போன் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.