Sellur Raju slams BJP; Amarprasad Reddy shared a 'flashback' photo

Advertisment

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (09.03.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்துவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி மற்றும் அதிமுக - பாஜக மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கூட்டத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது. இப்பொழுது அங்கிருந்து இங்கு வரும் பொழுது கசக்கிறதா. பா.ஜ.க.விற்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிருடன் பேசக்கூடாது. அதுதான் எங்களது கருத்து. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக என்றைக்கும் பொறுத்துக்கொண்டு இருக்காது.

எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கிறார்கள். அந்த அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது. ஒரு காலத்தில் பாஜக மதிக்கக்கூடியதாக இருந்தது. அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுவதாகத் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தகுதியே கிடையாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதாவைப் போல் யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது” எனக் கூறியிருந்தார்.

Advertisment

Sellur Raju slams BJP; Amarprasad Reddy shared a 'flashback' photo

இதற்கு பதிலடியாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, “இத்தனை நாட்கள் தெர்மாகோல் ஆராய்ச்சியில் இருந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,திமிரில் பேசக் கூடாது என பா.ஜ.க.வுக்கு ஆலோசனை சொல்கிறார். அவர் தன்னை வளர்த்துக் கொண்ட பின் கருத்துச் சொன்னால் நல்லது. வாய்க்கொழுப்பின்றி பேசுவது; திமிரின்றி நடந்து கொள்வது என்பது குறித்தெல்லாம் வகுப்பெடுக்க மதுரையில் விரைவில் கல்லூரி துவங்கப் போறாராம் செல்லூர் ராஜுநெருங்கிய நட்பில் இருக்கும் யாராவது அங்க ஒரு ‘சீட்’ வாங்கிக் கொடுங்கப்பா” எனக் கிண்டலாகப் பேசியுள்ளார்.