திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள், பொதுமக்களை பாதிக்கும் சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 22, 2019) பரப்புரை செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் எட்டுவழிச்சாலை திட்டத்தால் விவசாயிகள் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த திட்டத்தால் 8,000 ஏக்கர் விளைநிலங்கள் அழிக்கப்படுகின்றன. 300 ஏக்கர் காடுகள், 8 மலைகள் அழிக்கப்படுகின்றன. 10,000-க்கும் மேற்பட்ட கிணறுகள், 154 பெரிய ஏரிகள், 314 சிறிய குளங்கள், 20 பள்ளிகள், 250-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்கள், 30 ஆயிரம் தென்னை மரங்கள், 6,700 ஆழ்துளை கிணறுகள், 28,000 குடியிருப்புகள் அழிக்கப்படும்.
எனவே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இந்த திட்டத்தை கமிஷனுக்காக, நிறைவேற்றியே தீருவோம் என பிடிவாதமாக எடப்பாடி பழனிசாமி பச்சை மரங்களை எல்லாம் இன்றைக்கு வெட்டி வீழ்த்தி வருகிறார்.
விவசாயிகளிடம் உள்ள அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தையும் இன்றைக்கு பலவந்தமாக பிடுங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதைத்தடுக்க சென்றால் அவர்கள் தாக்கப்படுகின்றனர், கைது செய்யப்படுகின்றனர். ஆகவே இதை தடுத்த நிறுத்த வேண்டும் என்ற அடிப்படையில்தான், திமுக தேர்தல் அறிக்கையில் 5 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் ஏற்காத சேலம் - சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து செய்யப்படும் என்று உறுதி அறிவித்திருக்கிறோம்.
அதேநேரம், சென்னை - சேலம் இடையில் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறமும் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தை பயன்படுத்தி அகலப்படுத்தவும் மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அளித்திருக்கிறோம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.