
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், திமுக, அதிமுக, நாதக, அமமுக மற்றும் மநீம என ஐந்து முனை போட்டியை சந்தித்தது. அதில் திமுக தனிப்பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது. மேலும், அதிமுக எதிர்க்கட்சியாக அமரவிருக்கிறது. நேற்று (7ஆம் தேதி) ஆளுநர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக முதல்வராக பதவி பிரமாணம் செய்துவைத்தார். மேலும், அவருடன் 33 அமைச்சர்களுக்கும் பதவி பிரமாணம் செய்யதுவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு நியமிக்கப்பட்டார். மேலும், முதல்வரின் முதலாவது முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன், இரண்டாவது செயலாளராக உமாநாத், மூன்றாவது செயலாளராக சண்முகம் மற்றும் நான்காவது செயலாளராக அனு ஜார்ஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை வரவேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ட்விட் செய்துள்ளார். அதில் அவர், ‘தமிழகத்தின் தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மதிப்பிற்குரிய ஐயா வெ.இறையன்பு அவர்களுக்கும், முதல்வரின் முதன்மைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் உதயச்சந்திரன் உள்ளிட்ட நான்கு குடிமைப்பணி அதிகாரிகளுக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
மக்களுக்கான பணிகள் சிறக்கவும், நல்லதொரு நிர்வாகத்தை அளித்திடவும் நேர்மையும், திறமையும் மட்டுமல்லாது சமூகப்பற்றும் கொண்ட ஐயா இறையன்பு, திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றல்கொண்ட சகோதரர் உதயச்சந்திரன் போன்றவர்கள் நிர்வாகப்பணிகளில் முதன்மையாக முன்னிறுத்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது’ என்று பதிவிட்டுள்ளார்.