Skip to main content

சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

thiruvarur

 

சாத்தான்குளத்தில் காவல்நிலைய விசாரணைக்குச் சென்ற தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து இன்று திருவாரூரில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கிருந்த ஒருவர் திடிரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

சாத்தான்குளம் சம்பத்திற்கு காரணமான போலீசாரை கண்டித்தும் தாக்குதலில் ஈடுபட்ட காவலர்களை கைது செய்யக்கோரியும், திருவாரூர் ரயில் நிலையத்தின் முன்பு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் செய்தனர்.

 

அதில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனர். அப்போது அங்கு கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த வி.சி.க. தொண்டரணி மாநில பொறுப்பாளர் தமிழ்க்கதிர் என்பவர் திடிரென உடம்பில் மண்ணென்னையை ஊற்றிக்கொண்டு தீ குளிக்க முயன்றார். இதனால் ஆர்ப்பாட்டமே பரபரப்பானது.


இதனால் பதறிப்போன பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினரும் போராட்டத்தில் இருந்தவர்களும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

இது குறித்து தமிழ்கதிர் கூறுகையில், "பேரளம் காவல் ஆய்வாளர், தன்மீது வழக்குகள் இருப்பதால் தற்போது ஜாமீனில் இருக்கிறேன். அதனால் பேரளம் காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறேன். இன்று கையெழுத்திட சென்றபோது, அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருவரும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகின்றனர். எனக்கு மன உளச்சல் அதிகமாகிவிட்டது. இதனால்தான் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக" கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்