சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பினார் சசிகலா. கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா. சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக்கூடாது என அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி அவர் அதிமுக கொடியுடனான காரிலேயே புறப்பட்டார். பெங்களூருவில் ஆரம்பித்து சென்னை வரை அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர்.
இதில், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறையப் பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்” என்று தெரிவித்தார்.
இப்படி வெளிவந்ததுமே சசிகலா தனது அரசியல் நுழைவு குறித்தான கருத்தைத் தெரிவித்துவிட்டே வந்தார். இதிலேயே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலக்கம் அடைந்தார். சென்னை வந்த சசிகலா, தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அதிமுக குறித்துப் பேசுவார் என ஒரு தரப்பினரும், அவ்வளவுதான் இனி சசிகலா அரசியலுக்கு வருவதெல்லாம் கடினம் என மற்றொரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசிவந்தனர்.
பிப்ரவரி 24ஆம் தேதி வரை தொடர்ந்து வந்த இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று (பிப்.24) முடிவுக்கு வந்தது. சென்னை திரும்பி தி.நகர் வீட்டிலிருந்த சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, தனது மௌனத்தைக் கலைத்து, “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார் சசிகலா. இதனால் மீண்டும் சசிகலா குறித்தான அரசியல் பேச்சுகள் காற்றில் கலக்க ஆரம்பித்தன.
சசிகலாவின் அரசியல் குறித்தான பேச்சுகள் உலா வந்துகொண்டிருந்தபோதே, தமிழ்நாட்டுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து திமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி சசிகலா, இரட்டை இலையை தன் தலைமைக்குக் கீழ் கொண்டுவருவார் என மீண்டும் சசிகலா பால்டிக்ஸ் பறக்கத்துவங்கின.
ஆனால், பொதுவெளியில் மௌனம் காத்த சசிகலா, அதன்பிறகு தனது ஆதரவாளர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசி ஆடியோக்களை ரிலீஸ் செய்து தன் பற்றியான அரசியல் பேச்சுகளை ‘ஹாட் டாப்பிக்’காகவே வைத்திருந்தார். அதேசமயம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நிலை மிக மோசமாக, மருத்துவமனையிலிருந்த அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.-ன் துணைவியார் மறைவுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினார். இதுவெல்லாம் அதிமுக மத்தியிலும், மற்றக் கட்சியினர் மத்தியிலும் சசிகலாவைக் கள அரசியலில் நிறுத்திவைத்துக்கொண்டே இருந்தது.
சசிகலா பற்றியான பேச்சுகள் தொடர்ந்து எழுந்தாலும், சசிகலா நேரடியாக அரசியல் குறித்துப் பேசாததால் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலுமே ஒருவித அமைதி நிலவியது. ஆதரவாளர்களின் ஆராவாரம் குறைவதற்குள் மீண்டும் அடுத்த தீப்பொறியைக் கிளப்பினார் சசிகலா. கடந்த 17ஆம் தேதி அதிமுக தனது பொன் விழா ஆண்டை கொண்டாடியது. இதற்கு முன்னதாகவே திட்டமிட்ட சசிகலா, ‘பொன்விழா ஆண்டில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவது. பின் எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்று மரியாதை செய்வது’ என பக்காவாக ஸ்கெச் போட்டு ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தார். இதில், அதிமுகவின் துவக்க நாளான 17ஆம் தேதிக்கு முன்னதாகவே அதாவது 16ஆம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்ல திட்டமிட்டு அதன்படியே சென்றார். மேலும், 17ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வாணியம்பாடியில் பேசிய, ‘அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ எனும் அதே கருத்தை மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
அதேபோல், தி.நகரில் உள்ள ஜானகி, எம்.ஜி.ஆர். இல்லத்தில், ‘அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டைத் திறந்து வைத்து மீண்டும் எடப்பாடியைப் பதட்ட நிலையில் அமர்த்தினார் சசிகலா.
பொன்விழாவில் எடப்பாடியின் பிரஷரை எகிற வைத்த சசிகலா, அடுத்ததாக வரும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கரின் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்களாம். முத்துராமலிங்கருக்கு மரியாதை செலுத்தும் சசிகலா, அங்குப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் அப்போதும் அரசியல் குறித்த அடுத்த அறிவிப்போ, தகவலோ வெளிவரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இந்நிகழ்ச்சியின் மூலமாகவும், பயணத்தின் மூலமாகவும் தென் மாவட்ட அதிமுகவினரை சசிகலா கவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.