2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக, ஆட்சியை இழக்கிறது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை முன்னுறுத்தி தேர்தலை எதிர்கொண்டது அதிமுக.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தான் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டார். அதிமுக தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், அமமுகவுக்கு சசிகலா ஆதரவு தெரிவிக்கவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அதிமுக நிலை எப்படி இருக்கும் என்று பார்த்த பின்னர் முடிவு எடுப்பார் என்று விவாதங்கள் நடந்து வந்தன.
இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. இப்போது சசிகலா என்ன முடிவு செய்வார் என்று அரசியல் விமர்சகர் பொங்கலூர் மணிகண்டனிடம் கேட்டபோது, “சசிகலா அம்மையாரால்தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றார் என்பது உண்மை. அதிமுகவில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துதான் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அவர் அறிக்கை வெளியிட்டார். அது தற்காலிக முடிவுதான்.
அவர் வந்தாலும் வராவிட்டாலும் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது. இதே நிலை நீடிக்கும். தற்போது உள்ள எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, ஒப்புக்கொண்டு சசிகலா வந்தால் அதிமுகவில் எந்தக் குழப்பமும் ஏற்படாது. அதேநேரத்தில் சசிகலா அதிமுகவில் ஆளுமையைக் காட்ட வேண்டும் என்று இயங்கினால், கட்சியில் குழப்பம் ஏற்படும். இதுவரை சசிகலாவை எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கவில்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சசிகலா எடப்பாடி பழனிசாமியை மனதார வாழ்த்துவார் என்றுதான் நம்புகிறேன்” என கூறியுள்ளார்.