அதிமுக உறுப்பினர்கள், தொடர்ந்து சசிகலாவை வரவேற்று போஸ்டர்களை ஒட்டிவருவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருச்சி, தேனி உள்ளிட்ட இடங்களில் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டியவர்களை, அதிமுக தலைமை, கட்சியிலிருந்து நீக்கியது. அதிமுக தலைமை நடவடிக்கை எடுத்த போதிலும் சசிகலாவுக்கு அதிமுக தொண்டர்களிடையே வரவேற்பு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டையில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நிலக்கோட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழி சேகர். இவர் வீட்டின் எதிரே சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதனைக் கண்ட எம்.எல்.ஏ. குடும்பத்தினர் குழப்பத்தில் உள்ளனர். மேலும், பல்வேறு பகுதிகளில் சசிகலாவை வரவேற்று அதிமுக நகர இளைஞர் பாசறை பொருளாளர் அழகு முருகன் மற்றும் ஜெ பேரவை முன்னாள் ஒன்றியச் செயலாளர் அனைப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவிற்கு வந்த முக்கிய நிர்வாகிகள் பலரும் சசிகலாவை வரவேற்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. நிலக்கோட்டை தொகுதியில் முதல் முறையாக, சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதால், அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.