Skip to main content

சசி வரட்டும்... காத்திருக்கும் கட்சிகள்!

Published on 25/08/2020 | Edited on 25/08/2020

 

246546

 

சிறையில் இருந்தாலும் சசிகலாவின் பிறந்தநாளை ஆகஸ்ட் 18 அன்று போஸ்டர்களாலும் நாளிதழ் விளம்பரங்களாலும் அமர்க்களப்படுத்தினார்கள் அ.ம.மு.க.வினர்.

 

"33 ஆண்டு காலம் அக்கா-தங்கை உறவைப் புனிதமாக்கி சிறை சென்ற தியாகத் தலைவியே, தாங்கள் அவதரித்த நன்னாள் எங்களுக்கு பொன்னாள், ‘தியாகத் தாயே வணங்குகிறோம். ‘வங்கக் கடலோரம் துயில்கொள்ளும் தங்கத் தலைவியின் வீரப் பேரரசியே' -இப்படியெல்லாம் வார்த்தைகளால் வாழ்த்து மழை பொழிந்தனர் அ.ம.மு.க.வினர்.

 

கட்சிப் பதவிகளிலிருந்து சமீபத்தில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்.ஸால் நீக்கப்பட்ட தென் மாவட்ட அ.தி.மு.க. புள்ளிகள் பலர் நேரடியாகவே டி.டி.வி. தினகரனை தொடர்புகொண்டு, "சசிகலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தைக் கூறிவிட்டு, “சிறையில் இருக்கும் சின்னம்மாட்ட சொல்லிருங்கண்ணே' என பிட்டைப் போட்டு வைக்கின்றனர். தினகரனை தொடர்புகொள்ள முடியாதவர்களோ, அ.ம.மு.க.வின் மா.செ.க்களிடம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

அ.ம.மு.க.வினருக்கு இப்போதைய எஜமானியாகவும், அ.தி.மு.க.வினருக்குப் பழைய எஜமானியாகவும் இருந்ததால், இருதரப்பும் சசிகலாவுக்கு விசுவாசம் காட்டுவதும், பிறந்தநாளைக் கொண்டாடுவதும் தப்பில்லை... அதிலும் அமைச்சர்களாக இருப்பவர்கள் மீடியாக்களிடம் பேசும்போது சசிகலா என்றும், தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது சின்னம்மா என்றும் பவ்யம் காட்டுகிறார்கள்.

 

அ.ம.மு.க., அ.தி.மு.க. பிரமுகர்கள் சசிகலா பிறந்தநாளை முன்னிட்டும் அவர் விடுதலையாகப் போகும் நாளை நினைத்தும் ஒருவித உற்சாகம் அடைந்துள்ள நிலையில், தி.மு.கவில் சிலரும் ஆர்வத்துடன் இருப்பது வித்தியாசமாக உள்ளது.

 

"அந்தம்மா எவ்வளவு பெரிய தியாகம் பண்ணிருக்காங்க. எடப்பாடிக்குப் பதிலா ஓ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்தி முதலமைச்சர் ஆக்கியிருந்தா இன்னைக்கு நிலைமையே வேற. சீக்கிரமே அந்தம்மா ரிலீஸாகி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஆனா காசு, பணம் தாராளமா பொழங்கும். அந்தம்மா வந்தாதான் அரசியலும் களைகட்டும்'' என வார்த்தைக்கு வார்த்தை சசிகலாவை "அம்மா' என அழைத்து நம்மிடம் உருகினார் இராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. புள்ளி ஒருவர்.

 

தேனி மாவட்ட தி.மு.க. ஒ.செ. ஒருவரோ, "சசிகலா வெளில வந்தா என்ன, வராட்டி போனா என்ன? எல்லாம் எங்களுக்கு ஒண்ணுதான். 2021 -இல் ஆட்சியைப் பிடிக்கணும்னா கடுமையா உழைக்கணும்னு தளபதி எங்களுக்கு பல வேலைகளைக் கொடுத்திருக்காரு. அ.தி.மு.க.வுல இப்ப நடக்குற கூத்தப் பத்தி நாங்க ஏன் கவலைப்படணும்? அது பன்னீர் பாடு, எடப்பாடி பாடு. முக்குலத்தோர் என்பதற்காக சசிகலாவையெல்லாம் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம் உண்மையான தி.மு.க.காரனுக்கு இல்லை'' என்கிறார்.

 

சசிகலா ரிலீஸ் நாள் இரண்டு பெரிய கட்சிகளிலும் அதிர்வை உண்டாக்கியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்