Skip to main content

“எனக்கு தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும்” - இல.கணேசன்

Published on 23/01/2021 | Edited on 25/01/2021


   

ddd

 

சசிகலா விடுதலையானதும் அவரை ஆதரிக்கும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவரை சந்திப்பார்கள். அவரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றால் அதிமுக உடையும் என்று விவாதங்கள் அரசியல் களத்தில் நடந்து வருகிறது.

 

இந்நிலையில், தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பா.ஜ.க. மூத்த தலைவரும், தேசியக்குழு உறுப்பினருமான இல.கணேசன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது, “சசிகலா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கி, தண்டனை காலம் முழுமையாக முடிந்த பிறகு வெளியே வருகிறார். ஆனால் மற்ற கட்சித் தலைவர்கள் அவர் வருவதை சிங்கம், புலி, கரடி கூண்டில் இருந்து தப்பித்து வெளியே வருவது மாதிரி ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர். 

 

ஜெயலலிதா மீது விசுவாசம் கொண்டவர் சசிகலா. பின்னணியில் ஆயிரம் இருந்தாலும் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் இடையே இருந்த நட்பு, விசுவாசம் ஈடுசெய்ய முடியாத அளவு சிறப்பானது என்பதை அனைவரும் அறிவார்கள்.

 

அ.தி.மு.க. என்ற கட்சி ஜெயலலிதா நினைவாக உள்ள கட்சி. இரட்டை இலை சின்னம், ஜெயலலிதா நினைவாக உள்ள சின்னமாகும். அ.தி.மு.க. என்ற கட்சிக்கும், இரட்டை இலை சின்னத்துக்கும் யார் துரோகம் செய்ய நினைத்தாலும் அது மறைமுகமாக ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்தான்.


 
எனக்குத் தெரிந்த இந்த வி‌‌ஷயம் சசிகலாவுக்கும் தெரியும். எனவே அவர் துரோகம் செய்வார் என்று ஏன் நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. அவர் எதுவும் செய்யமாட்டார். எனவே அவசரப்பட்டு சசிகலா குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல. சசிகலா வெளியே வரட்டும். அதற்கு பிறகு பார்ப்போம். நல்லதே நடக்கும்.” இவ்வாறு கூறினார்.

 

சார்ந்த செய்திகள்