அ.தி.மு.க.வின் அமைச்சர் ஒருவர் பச்சைக் கொடி அசைக்க, அங்கே முதல்வர் வேட்பாளர் ரேசுக்கான சர்ச்சைகள் ஆரம்பமாகிவிட்டது. அ.தி.மு.க.வின் கட்சித் தலைமைப் பொறுப்பாளர்களிடம், முன்னணி அமைச்சர்கள் மாறி மாறிப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் தேனி மாவட்ட அ.தி.மு.க.வின் போடி நகர அமைப்பினர் உச்சம் போய், 2021ல் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ். என்று போஸ்டர் மூலம் பதிவு செய்ததால் உட்கட்சியில் சர்ச்சைகள் வெடித்துவிட்டன.
அ.தி.மு.க.வின் அரசியல் சூழல் இப்படி இருக்க, பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சென்ட்ரல் சிறையிலிருக்கும் சசிகலா விரைவில் வெளியே வருவார். அவர் பின்னால் ஆதரவாளர்கள பிரம்மாண்டமான அளவில் திரளுவார்கள், என அ.தி.மு.க.வில் மட்டுமல்ல, டி.டி.வி.யின் அ.ம.மு.க.விலும் பரபரப்புகள் பஞ்சமில்லாமல் ஓடுகிறது.
இதனிடையே அவரின் ஆதரவாளர்களின் எண்ணங்கள் வெளிப்படும் வகையில் தென்காசி மாவட்டம் முழுவதிலும், தியாகத் தலைவி சின்னம்மா பேரவை அமைப்பு, என்று சசிகலா, டி.டி.வி. படத்துடன் போஸ்டர்கள் ஓவர் நைட்டில் முளைத்திருப்பது பேசும் பொருளாகியிருக்கிறது.
அந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் சிலருடன் கூடிய பேரவையின் போஸ்டர், தென்னக அரசியல் புள்ளிகளை உற்று நோக்க வைத்திருக்கிறது.