முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம், கட்சியின் விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். அதன் பிறகு அரசியல் குறித்து எந்தவித அறிக்கையும் பேட்டியும் பத்திரிகை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தாமல் மௌனம் சாதித்துவந்தார். அப்படி இருந்தவர் சமீபத்தில் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் சகோதரர் இறந்த துக்கத்தை விசாரிப்பதற்காக அங்கு சென்றுவந்தார். மற்றபடி மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் போன்றவர்களைக் கூட பெருமளவில் சந்திப்பதைத் தவிர்த்துவந்தார். இருந்தபோதிலும் அவரது ஆதரவாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தேர்தல் தோல்வி குறித்தும் கட்சி பணிகள் குறித்து கட்சியின் எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் அவ்வப்போது விவாதித்துவந்தனர்.
மேலும், சசிகலா சமீபத்தில் அதிமுக கட்சித் தொண்டர்களிடம் ஃபோன் மூலம் பேசி ஆறுதல் சொல்லியதும், கட்சியைக் காப்பாற்ற நான் வருவேன், கட்சி வீணாவதைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன் என்று கூறியது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலா மீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கிறார் என்பதை அறிந்த முன்னாள் முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பி.எஸ், சில நாட்களுக்கு முன்பு சென்னையில் பத்திரிக்கை ஊடகத்தினரைச் சந்தித்துப் பேசினார். அதில், “சசிகலாவுக்கு அதிமுக குறித்து பேசுவதற்கு உரிமை இல்லை. அவர் ஃபோனில் பேசி ஆறுதல் கூறியது தினகரன் கட்சியில் உள்ள அமமுக தொண்டர்களுக்குத்தான்” என்று கூறினார். இதையடுத்து நேற்று (07.06.2021) விழுப்புரம் மாவட்டச் செயலாளர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், மாவட்டத்திலுள்ள கட்சிப் பொறுப்பாளர்கள், ஒன்றியச் செயலாளர்களை வரவழைத்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
முடிவில் பத்திரிகை, ஊடகத்தினரிடம் பேசும்போது, சசிகலா செல்ஃபோன் மூலம் கட்சி தொண்டர்களிடம் ஆறுதல் வார்த்தை பேசிவருவது குறித்து கேட்டதற்கு பதிலளித்த அவர், “அதிமுக, தொண்டர்களால் உருவான இயக்கம். எம்.ஜி.ஆர் கூட அந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பிறகு பல்வேறு நபர்கள் பல்வேறு விதங்களில் கட்சியை சுக்குநூறாக உடைப்பதற்கு பலமுறை பல்வேறு விதமான முயற்சிகளை செய்தனர். அவையெல்லாம் முறியடிக்கப்பட்டன. தொண்டர்கள் பலத்தில் இயங்கும் இயக்கம் இது. இந்த இயக்கத்திலிருந்து நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று சொல்லிக்கொண்டு நெடுஞ்செழியன், பண்ருட்டியார், கே.ஏ. கிருஷ்ணசாமி போன்றவர்கள் கட்சியைப் பிளவுபடுத்த முயற்சித்துப் பார்த்தார்கள். அவர்களால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களாவது அதிமுக வளர்ச்சிக்கு உழைத்தவர்கள். நெடுஞ்செழியனைவிட பெரிய ஆளா சசிகலா? அப்படிப்பட்டவர்களால் கூட இந்த கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்க முடியவில்லை. அப்படிப்பட்ட இந்த இயக்கத்திற்கும் சசிகலாவுக்கும் என்ன சம்பந்தமும் இல்லை.
ஜெயலலிதாவிற்கு (அம்மா) உதவியாளராக அவர் வீட்டுக்கு வந்தவர் சசிகலா. மற்றபடி அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரும் தினகரனும் தேர்தல் ஆணையத்திலும் டெல்லி உயர் நீதிமன்றத்திலும் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையிலான அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றியது செல்லாது, இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்கள். அதை விசாரணை செய்த தேர்தல் ஆணையம் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் இயங்கும் அதிமுகதான் உண்மையான இயக்கம். அந்த இயக்கத்திற்குதான் இரட்டை இலை சொந்தம் என்று தீர்ப்பு வழங்கினார்கள். அதே தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றமும் அளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். அங்கேயும் தள்ளுபடி செய்யப்பட்டது. அப்படிப்பட்ட சசிகலாவுக்கும், தினகரனுக்கும் இந்தக் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எங்கள் கட்சியின் முன்னாள் அமைச்சர் காளிமுத்து அடிக்கடி கூறுவார், கருவாடு மீனாகாது என்று கூறுவார்கள். கருவாடு கூட மீனாகும், ஆனால் சசிகலா ஒருபோதும் அதிமுகவில் உறுப்பினராக கூட ஆக முடியாது.
அதனால் தொண்டர்கள் ஆதரவோடு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தலைமையில் கட்சி செயல்படும்” என்று ஆவேசமாக கூறினார். முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம், இவரது இந்த ஆவேசமான பேச்சை அலுவலகத்தில் கூடியிருந்த அதிமுக நிர்வாகிகள் பலத்த கைதட்டல் செய்து வரவேற்றனர். இவரது பேச்சு அதிமுக தொண்டர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதே நேரத்தில் சசிகலா தினகரன் தரப்பினரிடம் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள். “தினகரன் கட்சியை நம்பி சென்ற பிரமுகர்கள் பலரும் கடனில் தத்தளிக்கின்றனர். அதிமுகவில் போட்டியிட்ட பல வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை பல தொகுதிகளில் இழப்பதற்கு காரணமாக இருந்தது சசிகலா தினகரன் தான். தன் கண் குருடானாலும் பரவாயில்லை, எதிரியின் கண் குருடாக வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள் சசிகலா தரப்பினர். அதனால் தேர்தலுக்கு முன்பு கூட சசிகலாவின் பெயரில் அதிமுக தொண்டர்களுக்கு ஒருவித அனுதாபம் இருந்தது. தேர்தலில் தோற்பதற்கும் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியாமல் போனதற்கும் தினகரன், சசிகலா ஆகியோர்தான் மிக முக்கியக் காரணம் என்ற கோபம் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்கள்வரை ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகதான் சி.வி. சண்முகம் தொண்டர்களின் கருத்தைப் பிரதிபலித்துள்ளார்” என்கிறார்கள் அதிமுகவினர்.