சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மரணம் அடைந்த நிலையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 4 ஆண்டுகள் சிறை தண்டனையையும் உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந்தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் கர்நாடக மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்ட கால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் 2 பங்கு காலத்தை சிறையில் கழித்துவிட்டால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.
இதனால் தண்டனை காலம் முடியும் முன்பு நன்னடத்தை விதிகளின் அடிப்படையில் சசிகலா சீக்கிரமாக விடுதலை ஆகி விடுவார் என்று சொல்லப்பட்டது. இந்த நிலையில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிற்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று கர்நாடக சிறைத்துறை இயக்குனர் மெக்ரித் தெரிவித்துள்ளார். அதோடு தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார் என்றும் கூறியுள்ளார். இதனால் சசிகலா தரப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.