Skip to main content

“ஆர்.எஸ்.எஸ் ரவி நன்றாக செயல்படுகிறார்” - துரை வைகோ

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

'RSS Governor Ravi is doing well' - Durai Vaiko

 

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் ரவி உரையுடன் 9 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி சேது சமுத்திரத் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்றக் கோரிய தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதோடு நிறைவடைந்தது.

 

சேது சமுத்திரத் திட்டம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ''சேது சமுத்திரத் திட்டத்தால் பொருளாதார ரீதியில் இயங்கும் பெரிய கப்பல்களுக்கு லாபம் இருக்காது. ஒரு திட்டம் கொண்டு வந்தால் ஆண்டுக்கு 12 சதவீத வருமானம் தர வேண்டும். ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தால் வருமானம் இருக்காது. மீனவர்களுக்கும் இந்தத் திட்டத்தால் பயனில்லை. மத்திய அரசுடன் இணைந்து புதிதாக சேது சமுத்திரத் திட்டத்தை உருவாக்கினால் பாஜக ஆதரிக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

 

mdmk

 

இந்நிலையில், இன்று மதிமுகவின் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தபோது சேது சமுத்திரத் திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ''வைகோவை பொறுத்தவரை இது நீண்டகாலத் திட்டம். கிட்டத்தட்ட ஆங்கிலேயர் காலத்திலேயே ஆங்கிலேயர்கள் இதைக் கொண்டு வர நினைத்தார்கள். அதன் பிறகு நேரு காலத்தில் காங்கிரஸ் இயக்கம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முக்கிய நபர்கள், தொழிலதிபர்கள் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தால் தென் மாவட்டங்கள் செழிக்கும் என்று கோரிக்கை விடுத்தார்கள். ஆனால், தொடர்ந்து பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தடைப்பட்டு இருந்தது.

 

1998-ல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அன்றைய காலகட்டத்தில் வைகோ மெரினா கடற்கரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் இந்த சேது சமுத்திரத் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனால் தமிழ்நாட்டுக்கு நல்லது. புதிய தொழில் வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பை கொடுக்கும். தொழில் வளர்ந்தால் இங்கு பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கோரிக்கை வைத்திருந்தார். அதன் பிறகு அரசியல் காரணங்களால், சனாதன மதவாத சக்திகளால் நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுவிட்டது. திமுக சார்பில் கலைஞர் சார்பில் மறுபடியும் கொண்டு வர நினைக்கும் பொழுது பாதியிலேயே நிறுத்தி வைத்திருந்தார்கள். இன்று சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து இன்றைய முதல்வர் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையாக வைத்திருக்கிறார்'' என்றார்.

 

அப்பொழுது செய்தியாளர் ஆளுநரின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துரை வைகோ, “ஆளுநர் செயல்பாட்டை பொறுத்தவரை பாஜகவிற்காக  நன்றாக செயல்படுகிறார். இரட்டைத் தலைமை என்று சொல்வார்களே, அது போல பாஜகவிற்கு அண்ணாமலை தலைவராக இருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் ரவியும் தமிழக பாஜகவிற்கு தலைவராக இருக்கிறார். சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள், குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட இப்படிப்பட்ட முக்கியமான தீர்மானங்களை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்திக் கொண்டு, அதே நேரத்தில் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்கிக் கொண்டு, ஒரு சனாதன சக்தியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்